அரச அதிகாரிகளின் இடமாற்ற விடயம்; மாந்தை மக்கள் ஜனாதிபதியின் செயலாளருக்கு அவசர கடிதம்

தங்களது காணி அபகரிப்பு நடவடிக்கைகளை மறைக்கவே அரச அதிகாரிகள் மாற்றப்பட வேண்டுமென கோருவதாகவும் தமக்கு அவர்களுடைய சேவையே தேவை எனவும் மாந்தை கிழக்கு மக்கள் ஜனாதிபதியின் செயலாளருக்கு கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளனர்.

அக்கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, மாந்தை கிழக்கு பிரதேச செயலக பிரிவை சேர்ந்த மக்களாகிய நாங்கள் போரின் பின்னர் மாந்தை கிழக்கு பிரதேச செயலகம் மூலம் பல நன்மைகளை பெற்று எமது வாழ்வை சிறிது சிறிதாக கட்டமைத்து வருகின்றோம்.

எமது இந்த அபிவிருத்திக்காக மாந்தை கிழக்கு பிரதேச செயலாளர் செல்வி.நிரஞ்சனாவும், காணி உத்தியோகத்தர் லக்ஷ்மனும் அயராது பாடுபடுகின்றனர். ஆனால் அண்மைக் காலமாக மாந்தை கிழக்கு தவிசாளர் முறையற்ற விதத்தில் மூன்று முறிப்பு - புதுக்குளம் பிரதேசத்தில் போலியான உறுதியை கொண்டு 60 ஏக்கர் காட்டை அழித்து விட்டார், இத்துடன் உழுவநரி பிரதேசத்திலும் 15 ஏக்கர் காட்டை அழித்து விட்டார், அத்துடன் பிரதேச சபை மூலமாக நடக்கின்ற அபிவிருத்தி நடவடிக்கைகளில் ஊழல் செய்து குறுகிய காலத்தில் வருமானத்துக்கு மேலதிகமாக வல்வெட்டி துறையில் ஆடம்பர பங்களா கட்டி குடும்பத்துடன் வாழ்ந்து வருகின்றார்.

இது தவிர மாந்தை கிழக்கு பிரதேச சபை உறுப்பினரான செந்தூரன் தனது சொந்த கனகரக வாகனம் மூலம் மாந்தை கிழக்கு பிரதேச காடுகளை அழிக்க முயன்று இரண்டு முறைக்கு மேல் பொலிஸாரால் கைதாகி எச்சரிக்கை செய்து விடுவிக்கப்பட்டார். இவரது காடழிப்பு பொலிஸாரின் எச்சரிக்கையை மீறி தொடர்ந்ததால் தற்போது இவரது கனகரக வாகனம் முல்லைத்தீவு நீதிமன்றத்தில் பாரப்படுத்தப்பட்டுள்ளது.

இதனால் ஆத்திரமடைந்த தவிசாளர், மற்றும் உறுப்பினர் செந்தூரன் மக்களுக்காக சிறப்பாக சேவையாற்றி வரும் பிரதேச செயலாளர் மற்றும் காணிக் கிளை உத்தியோகத்தர்கள் மீது அடுக்கடுக்காக போலியான குற்றசாட்டுகளை முன்வைத்து அவர்களது வினைத்திறனான மக்கள் சேவைகளை நடைபெறவிடாமல் தடுத்து வருகின்றனர். இது தவிர அரச காணிகளை போலியான ஆட்சி உறுதிப்பத்திரம் தயாரித்து கைப்பற்றும் ஒருசிலரும் இவர்களுக்கு உடந்தையாகவுள்ளனர். இவர்கள் தங்களின் கொள்ளையடிப்புக்காக முறையற்ற விதத்தில் இடம்மாற்றம் செய்வதற்கு பிரதேச சபை தவிசாளர் தனது அரசியல் அதிகாரத்தை பயன்படுத்துகிறார். இது தொடர்பாக தாங்கள் உடனடியான நடவடிக்கைகளை மேற்கொண்டு, பிரதேச மக்களாகிய எமக்கு நீதி பெற்று தருமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோமென தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடிதத்தின் பிரதிகள் முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர், முல்லைத்தீவு மாவட்ட அபிவிருத்திக்குழு தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமாகிய காதர் மஸ்தான், வடமாகாண பிரதம செயலாளர், இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழு, உள்நாட்டலுவல்கள் இராஜாங்க அமைச்சு, காணி ஆணையாளர் வடமாகாணம் ஆகியோருக்கும் அனுப்பிவைக்கப்பட்டுள்ளன.

 

Wed, 07/14/2021 - 12:18


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை