பூச்சாண்டிகளை புறந்தள்ளி மக்களுக்கான பணி தொடரும்

நியாயமான கருத்துகள் பரிசீலிக்கப்படும்

 மக்களுக்கு நன்மைகளை ஏற்படுத்தக்கூடிய திட்டங்களை பூச்சாண்டிகளினால் தடுத்து நிறுத்த முடியாதென தெரிவித்துள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, நியாயமான கருத்துக்கள் இருக்குமாயின்  அவை பரிசீலிக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.

கௌதாரிமுனையில் இலங்கை சீன கூட்டு நிறுவனத்தினால் அமைக்கப்பட்டுள்ள கடலட்டை குஞ்சு வளர்க்கும் நிலையத்தை நேற்று பார்வையிட்ட பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,

2016, 2017 காலப் பகுதியில் அப்போதைய அரசாங்கத்திடம் அனுமதிகளை பெற்று, அரியாலையில் கடலட்டை குஞ்சு பொரிக்கும் நிலையத்தை அமைத்த இலங்கை - சீனக் கூட்டு நிறுவனம், கடலட்டை குஞ்சு வளர்ப்பு நிலையத்தை கௌதாரிமுனையில் அமைத்துள்ளனர். இதற்கு தேவையான சட்ட ரீதியான அனுமதிகளை இதுவரை பெற்றுக்கொள்ளவில்லை. கடலட்டைப் பண்ணையைப் பொறுத்தவரையில் அவசியமான அனுமதிகளைப் பெற்று செயற்பாடுகளை ஆரம்பிக்க வேண்டுமாயின் நீண்ட காலம் காத்திருக்க வேண்டியேற்படும்.

எனவே, நாரா – நக்டா – கடற்றொழில் திணைக்களம் மற்றும் பிரதேச செயலகம் ஆகியவற்றின் ஆலோசனைகளைப் பெற்று மக்களுக்கு பாதிப்புக்கள் ஏற்படாதென அடையாளப்படுத்தப்படுகின்ற இடங்களில் கடலட்டைப் பண்ணைகளை அமைப்பதற்கு இசைவாக்கம் சார் அடிப்படையிலான அனுமதிகள் வழங்கப்பட்டு வருகின்றன.

அதேவேளை, எமது மக்களின் பொருளாதார நலன்களையும் நாட்டுக்கான அந்நியச் செலாவணியையும் பெற்றுத் தரக்கூடிய முதலீடுகளையும் தொழில்நுட்ப உதவிகளையும் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடனும் கௌதாரிமுனை கடற்றொழிலாளர்களுடனும் கலந்துரையாடி எமது மக்களுக்கும் நாட்டிற்கும் பாதிப்பில்லாத தீர்மானம் மேற்கொள்ளப்படும். கௌதாரிமுனை கடலட்டை குஞ்சு வளர்ப்பு நிலையம் தொடர்பாக அரசியல் நோக்கத்தோடு மக்களைக் குழப்பும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றது என்றார்.

Thu, 07/15/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை