பாராளுமன்ற குழுக்களுக்கு விசேட நிபுணர்கள், ஆய்வாளர்கள் ஒத்துழைப்பை பெற எதிர்பார்ப்பு

பாராளுமன்றத்தில் செயற்படும் அரசாங்க நிதி பற்றிய குழு, அரசாங்க பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழு (கோப் குழு) அரசாங்க கணக்குகள் பற்றிய குழு போன்ற விசேட குழுக்களுக்கு நிபுணர்கள் மற்றும் ஆய்வாளர்களின் உதவியைப் பெற்றுக் கொள்வது தொடர்பில் பாராளுமன்ற இணைப்புக் குழுவில் கூடுதல் கவனம் செலுத்தப்பட்டதாக பாராளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக தசநாயக்க தெரிவித்தார்.

சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் கலந்துகொண்ட சபை முதல்வரும் அமைச்சருமான தினேஷ் குணவர்தன, அரசாங்க நிதி பற்றிய குழுவின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் அநுர பிரியதர்ஷன யாப்பா, வர்த்தகத்துறை அமைச்சர் பந்துல குணவர்தன உள்ளிட்ட பாராளுமன்றக் குழுக்களின் தலைவர்கள் பலரும் இது பற்றிக் கருத்துத் தெரிவிக்கையில், பொருளாதாரம் உள்ளிட்ட பல்வேறு துறைகளின் நிபுணர்களின் ஒத்துழைப்பைப் பெற்றுக் கொள்வது அவசியமென வலியுறுத்தியிருந்தனர்.

அரசாங்க நிதி பற்றிய குழு போன்ற குழுக்கள் வரவுசெலவுத்திட்ட காலப்பகுதியில் ஒவ்வொரு நாளும் கூடவேண்டியிருப்பதாகவும், பொருளாதார நடவடிக்கைகள் மற்றும் நிதி சட்டமூலங்கள் கலந்துரையாடல்களுக்கு உட்படுத்தப்பட்டு அவற்றை அனுமதிக்க வேண்டியிருப்பதால் நிபுணர்கள் மற்றும்

ஆய்வாளர்களின் ஒத்துழைப்பைப் பெற்றுக் கொள்ள வேண்டிய தேவை அதிகமாக இருப்பதாக அநுர பிரியதர்ஷன யாப்பா சுட்டிக்காட்டினார்.

இதனை ஏற்றுக் கொண்ட சபை முதல்வர் அமைச்சர் தினேஷ் குணவர்தன, விசேட குழுக்களுக்கு நிபுணர்களின் உதவிகளைப் பெற்றுக் கொள்வது அவசியமானதெனக் குறிப்பிட்டார். அத்துடன் நிலையியற் கட்டளைகளைத் திருத்தி, அமைச்சுசார் ஆலோசனைக் குழுக் கூட்டங்களை அமைச்சுக்களில் நடத்துவதற்கான சாத்தியக் கூறுகள் குறித்து ஆராயப்பட வேண்டும் என்றும், இதன் ஊடாக கூடுதலான அதிகாரிகளின் ஒத்துழைப்பைப் பெற்றுக்கொள்ள முடியுமென்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

இதனைவிடவும், பொதுமனுக்கள் பற்றிய குழு போன்ற பொது மக்களுடன் நேரடியான தொடர்புகளை ஏற்படுத்தும் குழுக்களை பாராளுமன்றத்துக்கு வெளியே உள்ள இடமொன்றில் கூட்டுவதற்கான வாய்ப்புக்கள் குறித்தும் இங்கு கவனம் செலுத்தப்பட்டதாக செயலாளர் நாயகம் தம்மிக தசநாயக்க குறிப்பிட்டார். இதற்காக பாராளுமன்றத்துக்கு வெளியே அரசாங்கத்தின் கட்டடமொன்றை ஒதுக்குவது தொடர்பில் ஆராயுமாறு இங்கு கலந்துகொண்ட உறுப்பினர்கள் ஆலோசனை வழங்கியதாகச் சுட்டிக்காட்டிய செயலாளர் நாயகம், இதன் ஊடாக குழுக்களில் பொதுமக்களின் பங்களிப்பை அதிகரிக்க முடியும் என்றும் கூறினார்.

Wed, 07/21/2021 - 11:28


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை