எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் தீ அனர்த்தம்: பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு இழப்பீடு வழங்கல் நேற்று ஆரம்பம்

முழுமையான இழப்பீட்டை பெற சர்வதேச சட்ட நிறுவன உதவி

எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் தீவிபத்தினால் பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு இழப்பீடு வழங்கும் நடவடிக்கை நேற்று முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் முழுமையான இழப்பீட்டை பெறுவதற்காக சர்வதேச சட்ட நிறுவனத்தின் உதவியை நாட உள்ளதாகவும் நீதி அமைச்சர் அலி சப்ரி தெரிவித்தார்.

இலங்கைக்கு இழப்பீடாக இதுவரை 720 மில்லியன் ரூபா மத்திய வங்கிக்கு கிடைத்துள்ளது, ஜனாதிபதியின் அறிவுறுத்தலின் பேரில், மீனவர் சமூகத்திற்கு இழப்பீடு வழங்க சுமார் 420 மில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளதென்றும் அவர் குறிப்பிட்.டார்.

எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் தீ விபத்தினால் பாதிக்கப்பட்ட சகல தரப்பினருக்கும் இழப்பீடு வழங்குவது தொடர்பான விசேட கலந்துரையாடல் நேற்று நீதி அமைச்சில் நடைபெற்றது. இதில் எதிர்க்கட்சித் தலைவர் மற்றும் ஐக்கிய மக்கள் சக்தி எம்.பிக்களும் கலந்து கொண்டமை விசேட அம்சமாகும். இதுவரை கிடைத்துள்ள இழப்பீட்டுத் தொகையை பகிர்ந்தளிப்பது மற்றும் மீதமுள்ள இழப்பீட்டை பெறுதல் என்பன குறித்து இந்த கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. இழப்பீடு வழங்கும் போது மீனவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டதாகவும், கடலில் மூழ்கிய கப்பலின் கொள்கலன்களைக் கண்டுபிடிக்க முயன்று வருவதாகவும் இதற்கு இந்திய கடற்படை உதவுவதாகவும் அமைச்சர் தெரிவித்தார். ஆனால் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக இது தாமதமாகலாமென்றும் அமைச்சர் கூறினார்.

சேதங்களுக்கான இழப்பீட்டை பெறுவதற்கான சட்டரீதியான முன்னெடுப்புகள் சர்வதேச காப்புறுதி நிறுவனத்துடன் மேற்கொள்ளப்படுகிறது. இதற்காக சர்வதேச சட்ட நிறுவன உதவியை நாட முடிவு செய்யப்பட்டுள்ளது, குறிப்பாக சர்வதேச காப்பீட்டு நிறுவனங்களுடன் இழப்பீட்டுக்கான சட்ட செயல்முறை செய்யப்படுவதால், அமைச்சரவையின் ஆலோசனையுடன் சட்ட மாஅதிபரின் ஆலோசனைக்கமைய சட்ட நிறுவனத்தின் தேர்வு செய்யப்படுமென்றும் அமைச்சர் கூறினார்.

மீனவர் சமூகத்துக்கு இழப்பீடு வழங்க சுமார் 420 மில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. தங்களுக்கு ஏற்பட்ட சேதத்திற்கு அவர்கள் விண்ணப்பிக்கலாம். சேதவிபரம் உறுதி செய்யப்பட்ட பிறகு, அவர்களுக்கான இழப்பீடு வழங்கப்படுமென்றும் அவர் குறிப்பிட்டார். அமைச்சர் ரோஹித அபேகுணவர்தன, இராஜாங்க அமைச்சர் கஞ்சன விஜசேக்கர, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, சட்ட மாஅதிபர் சஞ்சய ராஜரத்னம், பாராளுமன்ற உறுப்பினர்கள் திலீப் வேதாரச்சி, டொக்டர் காவிந்த ஜயவர்தன, நிரோஷன் பெரேரா, நீதி அமைச்சின் செயலாளர் எம். பி. கே. மாயாதுன்ன, அரச அதிகாரிகள் மற்றும் சட்டத்தரணிகள் இந்த கலந்துரையாடலில் கலந்து கொண்டனர்.

ஷம்ஸ் பாஹிம்

Tue, 07/13/2021 - 08:49


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை