திறைசேரிமூலம் மேலதிக நிதி கோருவதை தவிர்த்துக்கொள்ளுங்கள்

அமைச்சர்களுக்கு நிதியமைச்சர் பசில் ராஜபக்‌ஷ வேண்டுகோள்

திறைசேரியிலிருந்து மேலதிக நிதி கோருவதை தவிர்த்துக் கொள்ளுமாறு நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ அமைச்சர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் தலைமையில் ஜனாதிபதி மாளிகையில் நடைபெற்ற ஆளும் கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களின் கூட்டத்தின் போதே நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ இந்த வேண்டுகோளை விடுத்துள்ளார்.

கடந்த காலங்களில் பெருமளவு வேலை வாய்ப்புகள் பெற்றுக் கொடுக்கப்பட்டுள்ளதையடுத்து புதிதாக ஆட்சேர்ப்புக்களை மேற்கொள்ள வேண்டிய அவசியம் கிடையாது என்பதை சுட்டிக்காட்டியுள்ள நிதியமைச்சர், சேவையிலுள்ள ஊழியர்களை பயன்படுத்தி நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் கேட்டுக் கொண்டுள்ளார்.

வெளிநாட்டு கையிருப்பில் சிறு குறைவு காணப்பட்ட போதும் அதனை முகாமைத்துவம் செய்து நிவர்த்தி செய்து கொள்ள முடியுமென தெரிவித்துள்ள நிதியமைச்சர், வெளிநாட்டுக் கையிருப்பு 1.2 பில்லியன் என்ற குறைந்த மட்டத்தில் காணப்பட்ட சந்தர்ப்பங்களும் உண்டு என்பதையும் சுட்டிக் காட்டியுள்ளார்.

மத்திய வங்கி மற்றும் தனியார் வங்கிகளில் சிலர் ஒன்றிணைந்து டொலர் மோசடியில் ஈடுபட்டுள்ளதாக தெரிவித்துள்ள நிதியமைச்சர், கறுப்புச் சந்தையில் டொலரின் பெறுமதி 235 ரூபாவாக அதிகரிப்பதற்கு அதுவே காரணம் என்றும் தெரிவித்துள்ளார். எனினும் அது தற்போது 215 ரூபாவாக குறைவடைந்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

அரிசியை 20 ரூபாவால் குறைப்பதற்கு வாய்ப்பு இருந்த போதும் நான்கு வர்த்தகர்கள் அரிசி மூலம் அதிக இலாபங்களை பெற்று வருவதாகவும் அமைச்சர் இதன்போது குறிப்பிட்டுள்ளார்.(ஸ)

லோரன்ஸ் செல்வநாயகம்

 

 

Tue, 07/20/2021 - 11:28


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை