கொவிட் நிலைமையால் பாதிக்கப்பட்ட சுற்றுலாத்துறையினருக்கு சலுகைகள்

அரசு உரிய தீர்மானங்களை எடுக்கும்

உலகளாவிய கொவிட் தொற்று நிலைமையை கருத்திற்கொண்டு சுற்றுலாத்துறையினருக்கு சலுகைகளை வழங்க அரசாங்கம் உரிய தீர்மானங்களை எடுக்கும் என்பதுடன், சுற்றுலாத்துறைக்கு வலுசேர்க்கும் முகமாக இரண்டு தடுப்பூசிகளை பெற்றுக்கொண்டுள்ள சுற்றுலாப் பயணிகள் தனிமைப்படுத்தல் செயற்பாடின்றி தமது சுற்றுலாவைத் தொடர்வதற்கான அனுமதியும் வழங்கப்பட்டுள்ளதாக சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் நேற்று வியாழக்கிழமை தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் அநுரகுமார திஸாநாயக்க எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு கூறினார்.

அவர் மேலும் பதிலளிக்கையில்,

சுற்றுலாத்துறையானது நாட்டின் பொருளாதாரத்திற்கு மிகவும் வலுவானதாக இருந்தது. அந்நிய வருவாய் அதிகமாக கிடைக்கும் ஒரு முறைமைதான் சுற்றுலாத் தொழில்துறை. 2009ஆம் ஆண்டின் பின்னர் சுற்றுலாத்துறையுடன் தொடர்புடைய தொழில்முனைவோரால் வெற்றிகரமாக இந்தச் செயற்பாட்டை முன்னெடுக்க முடிந்தது. 90 சதவீதம் தொழில்முனைவோர்தான் சுற்றுலாத்துறையை வலுப்படுத்துகின்றனர். உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல்கள் இடம்பெறும்வரை நாட்டின் சுற்றுலாத்துறையை கொண்டுச்சென்றது இவர்கள்தான். ஆகவே, இவர்களை பாதுகாப்பது எமது பொறுப்பாகும். அதேபோன்று சுற்றுலாத்துறையில் அனுபவமிக்கவர்கள் வேறு தொழில்களை நோக்கி நகர்கின்றமையை அண்மைக்காலமாக காணமுடிகிறது. உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் மற்றும் கொவிட்

தொற்று காரணமாக தொடர்ச்சியாக இவர்கள் மூன்றுவருடங்கள் தமது தொழிலை முன்னெடுக்க முடியாது போனமையாலேயே வேறு தொழில்வாய்ப்புகளை நோக்கி நகர்கின்றனர்.

சுற்றுலாத்துறையில் உள்ளவர்களுக்கு பல்வேறு சலுகைகளை பெற்றுக்கொடுக்க அரசாங்கம் நடவடிக்கையெடுத்திருந்தது. சுற்றுலாத்துறை தொழில்முனைவோரால் பெற்றுக்கொள்ளப்பட்டுள்ள கடன்கள் மற்றும் லீசிங்கை மீள செலுத்துவதற்காக 2020ஆம் ஆண்டு மார்ச் மாதம் முதல் பல்வேறு சலுககைளை அரசாங்கம் பெற்றுக்கொடுத்துள்ளது. கடந்த மாதம் 9ஆம் திகதி மத்திய வங்கியின் அதிகாரிகளுடன் நடத்திய கலந்துரையாடலில் இவர்களுக்கான கடன் சலுகையை ஜுலை (இம்மாதம்) 31ஆம் திகதிவரை நீடிக்க இணக்கப்பாடுகள் எட்டப்பட்டதுடன், எதிர்காலத்தில் கொவிட் தொற்று பரவல் நிலைமைகளை ஆய்வுக்கு உட்படுத்தி சலுகைக்காலத்தை வழங்குவது குறித்த நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

சலுகைக்காலத்தில் வட்டிச் செலுத்தலை இடைநிறுத்தவும் லீசிங் செலுத்தப்படாத வாகனங்கள் பறிமுதல் செய்யப்படுவதை நிறுத்தவும் தீர்மானங்கள் எடுக்கப்பட்டன. எதிர்காலத்தில் சுற்றுலாத்துறையினருக்கு பாதிப்பின்றி இலங்கை மத்திய வங்கி உரிய தீர்மானங்களை எடுக்கும் என்றார்.

சுற்றுலாத்துறையை மீள கட்டியெழுப்பும் தீர்மானங்களை அரசாங்கம் எடுக்கின்றன சந்தர்ப்பத்தில் எதிர்க்கட்சியினர் இதனை விமர்ச்சிக்கின்றனர். சுற்றுலாப் பயணிகள் கிராமங்களுக்கு வருகைத்தந்தால் அடித்தது விரட்டுமாறு கூறுகின்றனர். சுற்றுலாப் பயணிகளால் கொவிட் தொற்று பரவியுள்ளதாகவும் கூறுகின்றனர். இலங்கைக்கு வருகைத்தந்துள்ள சுற்றுலாப் பயணிகள் மற்றும் சுற்றுலாக் குழுக்களால் கொவிட் தொற்று எந்தவொரு சந்தர்ப்பத்திலும் பரவவில்லையென்பதை மிகவும்பொறுப்புடன் ஓர் அரசாங்கமாக கூறிகிறோம். நாட்டுக்கு சுமையற்ற விதத்தில் சுற்றுலாப் பயணிகளை கையாளும் விசேட முறைமைகளை நாம் கையாளுகிறோம். சுற்றுலாத்துறைக்கான புதிய வழிகாட்டல்கள் சுகாதார அமைச்சால் வெளியிடப்பட்டுள்ளது.இரண்டு தடுப்பூசிகளை செலுத்திக்கொண்டு நாட்டுக்குள் வருபவர்கள் தனிமைப்படுத்தல் செயற்பாடின்றி தமது பயணங்களை தொடர முடியும். அதேபோன்று எதிர்வரும் இரண்டு மாதங்களுக்குள் நாட்டில் அனைவருக்கும் ஒரு தடுப்பூசியேனும் வழங்கப்படுவதே அரசாங்கத்தின் இலக்காகும் என்றார்.

ஷம்ஸ் பாஹிம், சுப்பிரமணியம் நிஷாந்தன்

Fri, 07/09/2021 - 09:24


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை