மேல் மாகாணத்தில் ரயில் சேவைகளின் எண்ணிக்கை அதிகரிப்பு

மேல் மாகாணத்தில் நேற்று முதல் ரயில் சேவைகளின் எண்ணிக்கை 103 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.

பயணக்கட்டுப்பாடு தளர்த்தப்பட்டதையடுத்து ரயில் பயணிகளின் எண்ணிக்கை நாளாந்தம் அதிகரித்ததால், ரயில் சேவைகளின் எண்ணிக்கையை அதிகரிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக ரயில்வே திணைக்களத்தின் பிரதி பொது முகாமையாளர் காமினி செனவிரத்ன தெரிவித்தார்.

இதற்கமைவாக நேற்று அதிகாலை 50 புகையிரத சேவைகள் இடம்பெற்ற நிலையில் பிற்பகலில் மேலும் 53 புகையிரத சேவைகளை நடத்துவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டதாக அவர் கூறினார்.

புதிய புகையிரத சேவைகால அட்டவணையின்படி அம்பேபுஸ்ஸ, மீரிகம, வெயாங்கொட, கம்பஹா, மற்றும் ராகம ஆகிய பாதைகளின் ஊடாக 33 ரயில் சேவைகள் இடம்பெறவுள்ளன.

கரையோர ரயில் சேவைகளான அளுத்கம, களுத்துறை, மொரட்டுவ, பாணந்துறை மற்றும் கல்கிஸ்ஸ ஆகிய பிரதேசங்கள் ஊடாக 42 சேவைகளும் களனிவெளி ரயில் பாதை ஊடாக அவிசாவளை, கொஸ்கம மற்றும் பாதுக்க ஆகிய பிரதேசங்களை ஊடறுத்து 13 புகையிரத சேவைகளும் இடம்பெறவுள்ளன. இதேவேளை, அத்தியாவசிய சேவைகளுக்காக மாத்திரம் வருவோரின் வசதிகருதி மாகாணங்களுக்கூடாக வரையறுக்கப்பட்ட பஸ்கள், சேவையில் இணைத்துக்கொள்ளப்படும் என இலங்கை போக்குவரத்து சபை தெரிவித்துள்ளது.

Tue, 07/13/2021 - 12:18


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை