ஆசிரியர்களின் தொழிற்சங்க நடவடிக்கை தொடர்கிறது

45 இலட்சம் மாணவரது நிலை கேள்விக்குறி

ஒன்லைன் மூலமான கல்வி நடவடிக்கைகள் நேற்று நான்காவது தினமாகவும் நடைபெறாத நிலையில் க.பொ.த சாதாரணதர மற்றும் உயர்தரம் உட்பட  அனைத்து மாணவர்களும் பெரும் பாதிப்புகளை எதிர்நோக்கியுள்ளனர்.

கொரோனா  வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்படாத நிலையில் ஆசிரிய தொழிற்சங்கங்களைச் சேர்ந்த உறுப்பினர்கள் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளமையைக் கண்டித்து மேற்படி  பகிஷ்கரிப்பு போராட்டம் கடந்த நான்கு தினங்களாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

ஆசிரியர் சங்கத் தலைவர் ஜோசப் ஸ்டாலின் உட்பட தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ள அனைத்து தொழிற்சங்க உறுப்பினர்களையும் விடுவித்தால் மாத்திரமே கல்வி அமைச்சருடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட முடியும் என இலங்கை ஆசிரியர் சங்கத்தின் தலைவர் பிரியந்த பெர்னாண்டோ நேற்று தெரிவித்தார்.

ஆசிரியர் தொழிற்சங்கங்கள் மற்றும் அதிபர் தொழிற்சங்கங்கள் உள்ளிட்ட 42 தொழிற்சங்கங்கள் ஒன்றிணைந்து ஒன்லைன் கல்வி நடவடிக்கைகளில் இருந்து விலகும் பணி பகிஷ்கரிப்பு போராட்டம் கடந்த சில தினங்களாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதனால் நாடளாவிய ரீதியில் உள்ள பெரும்பான்மையான மாணவர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.கல்வியமைச்சர் பேராசிரியர்  ஜீ. எல். பீரிஸ் அது தொடர்பில் கருத்து தெரிவிக்கையில்:

பேச்சுவார்த்தை மூலம் பிரச்சினைக்கு தீர்வு காண முடிந்திருந்தும் மாணவர்களை பலிக்கடாக்களாக்கி ஆசிரியர்கள் மேற்கொண்டுவரும் இந்த மோசமான செயற்பாடுஏற்றுக்கொள்ள முடியாதது என தெரிவித்துள்ளார்.

கடந்த வாரம் பத்தரமுல்லையில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டம் ஒன்றின்போது கைது செய்யப்பட்டிருந்த மேற்படி கல்வித்துறை சார்ந்த தொழிற்சங்க உறுப்பினர்களை நீதிமன்றம் பிணையில் விடுவித்திருந்தபோதும் அவர்கள் தனிமைப்படுத்தலுக்கு உள்ளாக் கப்பட்டுள்ளமைக்கு எதிர்ப்பு தெரிவித்தே மேற்படி ஆசிரியர்கள் ஒன்லைன் கல்வி கற்கை நடவடிக்கைகளிலிருந்து பணி பகிஷ்கரிப்பு மேற்கொண்டு வருகின்றனர்.
அதை வேளை நேற்றைய தினமும் நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் அவர்களுக்கு ஆதரவாக ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.(ஸ)

லோரன்ஸ் செல்வநாயகம்

 

Fri, 07/16/2021 - 08:24


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை