செப்டெம்பருக்குள் நுவரெலியாவுக்கு 3 இலட்சம் தடுப்பூசி

செப்டெம்பர் மாத இறுதிக்குள் 03 இலட்சம் தடுப்பூசிகளை நுவரெலியா மாவட்டத்துக்கு வழங்க முடியுமென்பதில் நம்பிக்கை கொண்டுள்ளதாக இ.தொ.கா பொதுச்செயலாளரும் தோட்ட வீடமைப்பு மற்றும் சமுதாய உட்கட்டமைப்பு வசதிகள் இராஜாங்க அமைச்சருமான ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார்.

அமைச்சு அலுவலகத்தில் நடைபெற்ற மாதாந்த செய்தியாளர் மாநாட்டில் அவர் மேலும் தெரிவித்ததாவது,

நுவரெலியா மாவட்டத்தில் அரசாங்கம் முதற்கட்டமாக 25,000 தடுப்பூசிகளை மாத்திரம் வழங்கியிருந்தது. அதன் பின்னராக நாம் 50,000 தடுப்பூசிகளை பெற்றுக்கொண்டோம்.

மொத்தமாக இங்கு 1,68,406 தடுப்பூசிகளை மக்கள் இதுவரையிலும் முழுமையாக பெற்றுள்ளார்கள். 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு 96 % ம், ஆசிரியர்கள் 99 % ம் பெற்றுக்கொண்டுள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

மக்கள் தமது நலன்களில் அக்கறை கொண்டு பாதுகாப்பாக வாழ இத் தடுப்பூசிகளை பெற்றுகொள்வது அவசியமாகும். எனவே நுவரெலியா மாவட்டத்தில் 03 இலட்சம் தடுப்பூசிகளை பெறுவது செப்டம்பர் மாதம் இறுதிக்குள் நிறைவடையவேண்டும்.

அண்மையில் மலையக சிறுமியின் மரணம் தொடர்பில் உரிய நடவடிக்கைகளை நாங்கள் மேற்கொண்டு வருகின்றோம். இனிவரும் காலங்களில் மலையக பெற்றோர் தமது பிள்ளைகளை 18 வயது குறைந்தவர்களாயின் அவர்களை வீட்டு வேலைகளுக்கு அனுப்பக்கூடாது. இதற்கு மாற்று நடவடிக்கையாக எமது தொண்டமான் ஞாபகர்த்த மன்றத்தினூடாகவும், பிரஜாசக்தி நிலையத்தின் ஊடாகவும் அவர்களுக்கான வேலைத்திட்டத்தை முன்னெடுக்கவுள்ளோம்.

அச்சிறுமியின் ஆத்மா சாந்தி அடைய ஹற்றன் டயகமையில் நடைபெறவிருக்கும் நினைவேந்தலுக்கு நாம் நேரடியாக சென்று அஞ்சலி செலுத்த வேண்டும்.

அத்தோடு மலையக உறவுகள் தத்தமது வீடுகளில் மெழுகுவர்த்தி ஏற்றி அஞ்சலி செலுத்துமாறு அழைப்பு விடுக்கின்றோம் என்றும் கேட்டுக்கொண்டார்.

Wed, 07/21/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை