ஆர்ப்பாட்டம் நடத்த முயன்ற 16 பேர் கைது!

மட்டக்களப்பில் நேற்று சம்பவம்

மட்டக்களப்பில் இராஜாங்க அமைச்சர் எஸ்.வியாழேந்திரனின் வீட்டின் முன்பாக அவரது மெய்பாதுகாவலரால் சுட்டுக் கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்படும் மகாலிங்கம்  பாலசுந்தரம் என்பவரின் மரணத்துக்கு நீதிகோரி அவரது பெற்றோர் உட்பட கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட முயற்சித்த 16 பேரை பொலிஸார் கைது செய்துள்ளனர்

கடந்த மாதம் 21 ஆம் திகதி இராஜாங்க அமைச்சர் எஸ். வியாழேந்திரனின் மெய்பாதுகாவர் பொதுமகன் மீது துப்பாக்கி சூடு நடத்தியதில் 34 வயதுடைய மகாலிங்கம் பாலசுந்தரம் எனபவர் உயிரிழந்தார். இந்த துப்பாக்கிச்சூட்டுச் சம்பவம் தொடர்பாக அமைச்சரின் மெய்பாதுகாவலர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

இந்த நிலையில் உயிரிழந்தவரின் தந்தை, தாய் மற்றும் பொதுமக்கள் ஒன்றிணைந்து நீதி கோரி காந்தி பூங்காவுக்கு முன்பாக கவனயீர்பு ஆர்ப்பாட்டம் ஒன்றை நேற்று (07) முன்னெக்கவிருந்தனர். இதன்போது ஆர்ப்பாட்டத்திற்காக பஸ் ஒன்றில் அவர்கள் வந்திருந்ததுடன் அங்கு இளைஞர்களும் ஒன்றிணைந்தனர்.

இதனையடுத்து அங்கு பொலிஸார், புலனாய்வு பிரிவினர் இராணுவத்தினர், குவிக்கப்பட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட வந்தவர்களை எச்சரித்து எந்த விதமான ஆர்ப்பாட்டங்களையோ ஓன்று கூடலையே மேற்கொள்ள அரசாங்கம் தடைவிதித்திருப்பதாக தெரிவித்து அவர்களை திருப்பி அனுப்பினர். எனினும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட பஸ்ஸில் வந்தவர்கள் 16 பேரையும் பொலிஸார் கைது செய்துள்ளனர் .

 

வெள்ளாவெளி தினகரன் நிருபர்

Thu, 07/08/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை