பஸ் மீது தாக்குதல்; 13 பேர் பலி

பாகிஸ்தானுக்கு சீனா கண்டனம்

பாகிஸ்தானின் கைபர் பக்துவான் மாகாணத்தில் சீனப் பொறியியலாளர்கள், ஊழியர்களுடன் சென்ற பேருந்து மீது நடத்தப்பட்ட வெடிகுண்டு தாக்குதலில் 13 பேர் பலியாகினர். இச்சம்பவத்துக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள சீனா, இந்த சம்பவத்தில் தொடர்புடையவர்களை உடனடியாக தண்டிக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளது.

பாகிஸ்தானில் வீதி அமைத்தல், அணைகள் கட்டமைத்தல் போன்ற பல்வேறு பணிகளை சீனா மேற்கொண்டுவருகிறது. இந்நிலையில் கைபர் பக்துவான் பகுதியில் தாசு அணை கட்டப்பட்டு வருகிறது. அங்கு நடைபெறும் பணிகளை சீனா மேற்கொண்டு வருகிறது.

இந்நிலையில் சீனாவின் பொறியியலாளர்கள், சர்வேயர்கள் மற்றும் தொழில்நுட்ப ஊழியர்கள் கொண்ட குழுவினர் தாசு அணைப் பகுதியை நோக்கி ஒரு பேருந்தில் சென்று கொண்டிருந்தனர். அப்போது, அந்தப் பஸ்ஸை குறிவைத்து வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டது. இதில், 13 பேர் பலியாகினர். 28 பேர் காயமடைந்துள்ளனர்.

இது குறித்து சீன வெளியுறவு செய்தித் தொடர்பாளர், "இந்தத் தாக்குதலில் ஈடுபட்டவர்களை பாகிஸ்தான் கடுமையாக தண்டிக்க வேண்டும். பாகிஸ்தானில் வளர்ச்சித் திட்டங்களில் பணியாற்றும் சீனர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்" என்று கூறியுள்ளார்.

கைபர் பக்துவான் பொலிஸ் அதிகாரி ஒருவர் தாக்குதலை உறுதிப்படுத்தியதோடு இது மோசமான தாக்குதல் என்று கூறியுள்ளார்.

கடந்த ஏப்ரல் மாதம் தென்மேற்கு பாலோசிஸ்தானில் சீன தூதர் தங்கியிருந்த நட்சத்திர விடுதி பாகிஸ்தானி தாலிபன் படைகளால் தாக்கப்பட்டது. ஆனால், அந்தத் தாக்குதலில் நல்லவாய்ப்பாக சீன தூதர் உயிர் தப்பினார்.

பாகிஸ்தானில் கட்டுமான வளர்ச்சிக்காக சீனா பில்லியன் கணக்கில் முதலீடு செய்துள்ளது. இந்நிலையில் தலிபான்களின் தாக்குதல் அரசுக்கு நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.

Fri, 07/16/2021 - 08:04


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை