12 துறைகள் தொடர்ந்தும் அத்தியாவசிய சேவைகள்

விசேட வர்த்தமானி வெளியிடப்பட்டது

சுகாதார சேவை, துறைமுகம், பெற்றோலியம், சுங்கம் உள்ளிட்ட 12 துறைகள் அத்தியாவசிய சேவையாக தொடர்ந்தும் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளன. மேற்படி 12 துறைகளை தொடர்ந்தும் அத்தியாவசிய சேவையாக முன்னெடுத்துச் செல்வதற்கான ஜனாதிபதியின் வழிகாட்டலுக்கு அமைய ஜனாதிபதியின் செயலாளர் பி.பி. ஜயசுந்தரவினால் விசேட வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.

1979 ஆம் இலக்க 61 ஆம் அத்தியாவசிய பொதுமக்கள் சேவை சட்டத்திற்கு இணங்க இவ் விசேட வர்த்தமானியை ஜனாதிபதியின் செயலாளர் வெளியிட்டுள்ளார்.

அதற்கிணங்க சுகாதார சேவை, பெற்றோலியம், சுங்கம், துறைமுகம், ரயில்வே திணைக்களம், இலங்கை போக்குவரத்து சபை உள்ளிட்ட பொது போக்குவரத்து சேவை, மாவட்ட ,பிரதேச செயலகங்கள், கிராம சேவை அதிகாரிகள், விவசாய ஆராய்ச்சி உதவி அதிகாரிகள், இலங்கை மத்திய வங்கி உள்ளிட்ட அரச வங்கிகள் மற்றும் காப்புறுதி சேவைகள், உள்ளூராட்சி சபை நிறுவனங்கள் ஊடாக மேற்கொள்ளப்படும் கழிவகற்றல் சேவை, சதொச, கூட்டுறவு மொத்த விற்பனை கூட்டுத்தாபனம், உணவு ஆணையாளர் திணைக்களம், மாகாண சபையின் கீழ் இயங்கும் அனைத்து அரச அலுவலகங்களின் சேவைகள், தபால் திணைக்களம் ஆகியவை இந்த அத்தியாவசிய சேவைகளில் உள்ளடங்குகின்றன.

அதேவேளை சுகாதார சேவைகளுடன் சம்பந்தமான அனைத்து நடவடிக்கைகளும் சேவைகள் மற்றும் பணிகள், பங்களிப்புகள் அனைத்தும் அத்தியாவசிய சேவையாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளன.

மக்கள் இயல்பு வாழ்க்கையை முன்னெடுத்துச் செல்லும் வகையில் தேவையான சேவைகளை வழங்கும் நோக்கில் தடைகள், இடர்பாடுகள் இன்றி அவற்றை முன்னெடுத்துச் செல்லும் வகையில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் இவ்வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.(ஸ)

 

லோரன்ஸ் செல்வநாயகம்

Thu, 07/22/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை