125 புதிய நீதிமன்றங்களையும் 112 நீதிபதிகளையும் நியமிக்கவும்

விசேட குழு நீதியமைச்சுக்கு வழங்கிய அறிக்ைகயில் பரிந்துரை

நீதித்துறை எல்லைகளை நிர்ணயிப்பதற்கும், உயர் நீதிமன்றங்கள் உள்ளிட்ட நீதிமன்றங்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்கும் நியமிக்கப்பட்ட விசேட குழுவின் அறிக்கை நீதி அமைச்சர் அலி சப்ரிடம் கையளிக்கப்பட்டது.  உச்சநீதிமன்ற நீதிபதி  மஹிந்த சமயவர்தன தலைமையில் நியமிக்கப்பட்ட குழுவின் அறிக்கையில் நாடு முழுவதும் உள்ள நீதிமன்றங்களின் எண்ணிக்கையை 125 ஆக உயர்த்தவும், 74 புதிய நீதிமன்றங்களை உருவாக்கவும் முன்மொழியப்பட்டுள்ளது. அதன்படி, 16 புதிய உயர் நீதிமன்றங்கள், 21 மாவட்ட நீதிமன்றங்கள், 19 மஜிஸ்திரேட் நீதிமன்றங்கள் மற்றும் 18 ஒருங்கிணைந்த நீதிமன்றங்கள் நிறுவப்படும். தற்போதைய நீதிபதிகளின் எண்ணிக்கையை 112 ஆக அதிகரிக்கவும் முன்மொழியப்பட்டுள்ளது. தற்போதுள்ள நீதிமன்றங்களின் நீதிமன்ற அறைகளை விஸ்தரிக்கவும் குழு பரிந்துரைத்துள்ளது.

நாடு முழுவதுமுள்ள சட்டத்தரணிகள் சங்கங்கள் மற்றும் பிற ஆர்வமுள்ள தரப்பினரின் யோசனைகள் மற்றும் பரிந்துரைகளை இக்குழு கவனத்திற் கொண்டது. இதற்கமைய நீதித்துறை வலயங்களை மீண்டும் திருத்த வேண்டியிருந்தது. இறுதியாக 2010 ஆம் ஆண்டில் திருத்தம் செய்யப்பட்ட பின்னர் 2010 இல் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவிப்பின் அடிப்படையில் மாற்றங்கள் செய்யப்பட்டன. இந்தக் குழுவின் தலைவராக உச்சநீதிமன்ற நீதிபதி மஹிந்த சமயவர்தன செயற்பட்டதோடு குழு உறுப்பினர்கள் நிதி அமைச்சின் மேலதிக செயலாளர் மற்றும் மேலதிக கம்பனி பதிவாளர் திமால் அரந்தர, நீதி அமைச்சின் மேலதிக செயலாளர் பியமந்தி பீரிஸ் மற்றும் மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் இந்திகா தேமுனி த சில்வா, ஜனாதிபதியின் சட்டத்தரணி யூ. ஆர். த சில்வா நீதி அமைச்சின் சிவில் சட்ட சீர்திருத்தக் குழுவின் ஆலோசகர் சஞ்ஜீவ தசனாயக்க, நீதி அமைச்சின் உட்கட்டமைப்புக் குழுவின் ஆலோசகர் ஷமித் பெர்னாண்டோ ஆகியோர் கலந்து கொண்டனர். ஏனைய உறுப்பினர்களாக மேல் நீதிமன்ற நீதிபதி எம்.கே.ஏ.பீரிஸ், சிரேஷ்ட பொலிஸ் மாஅதிபர் அஜித் ரோஹண, அமல் ரந்தெனிய, சஞ்சய கமகே, நளின் சில்வா, சந்திமா வெலிகல மற்றும் ருவினி டி சில்வா ஆகியோர் செயற்பட்டனர்.(பா)

ஷம்ஸ் பாஹிம்

Sat, 07/17/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை