கொழும்பு மாவட்ட தொற்றாளர்களில் 100க்கு 30 வீதமானோருக்கு டெல்டா

அவதானமாக இருக்க சுகாதார தரப்பு கோரிக்கை

கொழும்பு மாவட்டத்தில் பதிவாகும் கொரோனா வைரஸ் தொற்று நோயாளர்களில் நூற்றுக்கு முப்பது வீதமானோர் டெல்டா திரிபு வைரஸ் தொற்று நோயாளர்களாக இருக்கலாம் என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட மருத்துவ நிபுணர் ஹேமந்த ஹேரத் அது தொடர்பில் தெரிவிக்கையில், வைரஸ் தொற்று நோயாளர்களிடமிருந்து பெறப்பட்ட மாதிரிகளை பரிசோதனைக்கு உட்படுத்தியதில் இத்தகவல் கிடைத்துள்ளதாக தெரிவித்துள்ளார். அந்த வகையில் இருபதுக்கும் முப்பதுக்கும் இடைப்பட்ட எண்ணிக்கையினர் அவ்வாறு டெல்டா திரிபு வைரஸ் தொற்று நோயாளிகளாக இருக்கலாம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

மாதிரிகளின் பரிசோதனைகளின் மூலம் மாத்திரமே இத் தகவலை பெற்றுக் கொண்டுள்ளதாக தெரிவித்துள்ள அவர், பிசிஆர் பொசிடிவ் ஆன அனைத்து நோயாளர்களிடமும் மாதிரி பரிசோதனை மேற்கொள்ளப்படாததால் இனங் காணப்படும் அனைத்து நோயாளர்களின் தகவல்களும் தமக்கு கிடைப்பதில்லை. அந்தவகையிலேயே கொழும்பு மாவட்டத்தில் இனங் காணப்படும் நோயாளர்களில் நூற்றுக்கு முப்பது பேர் டெல்டா திரிபு கொரோனா வைரஸ் நோயாளிகளாக உள்ளதை எம்மால் கூற முடியும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

அது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்:

குறிப்பாக வடக்கின் சில பிரதேசங்களில் டெல்டா திரிபு வைரஸ் தொற்று நோயாளர்கள் காணப்படுவதால் முழு நாட்டிலும் பெரும்பாலான பிரதேசங்களில் இந்த டெல்டா திரிபு வைரஸ் பரவல் காணப்படலாம்.

அதற்கிணங்க கொழும்பு வடக்கு, கொழும்பு தெற்கு, காலி, மாத்தறை,கிளிநொச்சி மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய பிரதேசங்களில் தற்போது டெல்டா திரிபு வைரஸ் நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர்.இந்தநிலையில் ஏனைய பிரதேசங்களிலும் அந்த திரிபு வைரஸ் நோயாளர்கள் இல்லை என கூற முடியாது. என்பதால் இந்த ஆபத்தான நிலைமையை உணர்ந்து அனைவரும் செயற்பட வேண்டியது முக்கியம் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். (ஸ)

லோரன்ஸ் செல்வநாயகம்

Tue, 07/20/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை