வவுனியாவிற்கு விரைவில் PCR இயந்திரம் கிடைக்கும்

பெற்றுத்தருவதாக அமைச்சர் டக்ளஸ் உறுதி

வவுனியாவில் கொரோனா தொற்று பரிசோதனையை மேற்கொள்வதற்கு பி.சி.ஆர் இயந்திரம் இல்லாத காரணத்தால் யாழ். போதனா வைத்தியசாலைக்கே மாதிரிகளை அனுப்ப வேண்டிய நிலை காணப்படுவதாக சுகாதார தரப்பு சுட்டிக்காட்டியதையடுத்து வவுனியா மாவட்ட செயலகத்தில் விசேட சந்திப்பொன்றை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஏற்பாடு செய்திருந்தார்.

வவுனியா மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற இவ் விசேட சந்திப்பில் பி.சி.ஆர் இயந்திரத்தின் தேவை மற்றும் அதனை இயக்குவதற்குரிய ஆளணி தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டது. தற்போது பி.சி.ஆர. இயந்திரம் இன்மையால் ஏற்பட்டுள்ள சிக்கல்கள் தொடர்பிலும் அமைச்சர் கேட்டறிந்துகொண்டார்.

கலந்துரையாடலின் இறுதியில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா,

“வவுனியாவுக்கு பி.சி.ஆர் இயந்திரத்தின் முக்கியத்துவம் தொடர்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இது தொடர்பில் சுகாதார அமைச்சருடன் கலந்துரையாடி விரைவில் பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும். அத்துடன் வவுனியாவில் சுகாதார துறையினரின் பல்வேறு பிரச்சினைகளுக்கும் தீர்வை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படுமெனவும் தெரிவித்தார்.

இதேவேளை கப்பல் எரிந்தமையினால் மீனவர்களின் வாழ்வாதார பிரச்சினை தொடர்பில் ஊடகவியலாளர்கள் கேட்டபோது, “பாணந்துறை முதல் வடக்கு நோக்கி மா ஓயா வரை பாதிப்பு இருக்கிறது.

அது இயல்பாகவே வெகு விரைவில் அற்றுப்போய்விடும். அவர்களுக்கு முதற்கட்டமாக 5,000 ரூபாய் வழங்கப்படுகின்றது. மேலும் பாதிப்புக்களை அவதானித்து உதவி வழங்கப்படுமெனவும் தெரிவித்தார்.

Fri, 06/04/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை