ஜனநாயகத்துக்கு குரல் கொடுத்த ஹொங்கொங் பத்திரிகை மூடப்பட்டது

ஊடக சுதந்திரம் பாதிக்கப்படுவதாக குற்றச்சாட்டு

ஹொங்கொங்கில் இருந்து வெளியாகிவந்த ஜனநாயகத்துக்காக குரல் கொடுக்கும் சீன மொழி தினசரியான 'எப்பள் டெய்லி' நிறுத்தப்பட்டு விட்டதாக அதன் உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர். அதன் இறுதி நாள் வெளியீடு கடந்த 24ம் திகதி கடைகளுக்கு வந்தபோது வாசகர்கள் போட்டி போட்டுக்கொண்டு அதை வாங்கி பத்திரப்படுத்திக் கொண்டார்கள்.

ஹொங்கொங் அரசு தொடர்ச்சியாக பத்திரிகை நிர்வாகத்தின் மீது அழுத்தம் பிரயோகித்து வந்ததாலும் ஆசிரிய பீடத்தில் உயர் பதவிகள் வகித்துவந்த ஐவர் கைதுசெய்யப்பட்டதையடுத்துமே இந்த 26 வயதான பத்திரிகையை நிறுத்துவதற்கு முடிவு செய்ததாக வெளியீட்டாளர்களான நெஸ்ட் டிஜிட்டல் தெரிவித்துள்ளது.

பிரான்சை தளமாகக்கொண்டு இயங்கும் எல்லைகளற்ற நிருபர்கள் என்ற பத்திரிகையாளர் அமைப்பு இதைக் கடுமையாகக் கண்டித்திருக்கிறது.

பீஜிங் அரசு மீது விமர்சனங்களை வைக்கக்கூடிய ஹொங்கொங்கின் முக்கிய சீன மொழி பத்திரிகையான 'எப்பள் டெய்லி'யின் கணக்குகள் முடக்கப்பட்டு அதன் வாயை ஹொங்கொங் நிர்வாகம் மூடியிருப்பதாகவும், இச் செயல் ஹொங்கொங் ஊடகவியலாளர்களுக்கு கடுமையான எச்சரிக்கையாகவே அமைந்திருப்பதாகவும் இந்த அமைப்பு தெரிவித்திருக்கிறது.

இதன் பேரில் சர்வதேச சமூகம் தன் கடுமையான எதிர்ப்பைத் தெரிவிக்கத் தவறுமானால், சீன ஊடகங்களின் சுதந்திரத்தை சீன ஜனாதிபதி ஸீ ஜின் பிங் பறித்திருப்பதைப் போலவே ஹொங்கொங் ஊடக சுதந்திரமும் பறிக்கப்பட்டுவிடும் என்று இந்த அமைப்பின் கிழக்காசிய பொறுப்பாளர் செட் ரிக் அல்வியானி தெரிவித்துள்ளார்.

பிரதம ஆசிரியர், பதிப்பாளர், நடவடிக்கை அதிகாரி உட்பட ஐவர் கடந்த வாரம் கைதாகினர். இவர்களில் மூவர் குற்றச்சாட்டுகள் சுமத்தப்படாமல் பிணையில் விடுவிக்கப்பட்டனர்.

தொடரும் நெருக்கடிகள் காரணமாக பத்திரிகையை மூடிவிட நேர்ந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

வெளிநாட்டு சக்திகளுடன் இணைந்து செயல்படுவதன் மூலம் ஹொங்கொங்கின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக பத்திரிகை நிர்வாகத்தின் மீது குற்றம் சுமத்தப்பட்டிருப்பதாகவும் தெரிய வருகிறது.

பத்திரிகை மூடப்பட்டிருப்பதை ஐரோப்பிய யூனியன் கண்டித்திருக்கிறது.

Mon, 06/28/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை