தமது ஆகாயவெளியை மீறியதாக சீனா மீது மலேசியா குற்றச்சாட்டு

மலேசியா அதன் கடலோரப் பகுதிக்கு அப்பால் தென் சீனக் கடற்பகுதியில் சீன இராணுவ விமானங்கள் நுழைந்ததைக் கண்டிக்கும் கடிதம் ஒன்றை அனுப்பவுள்ளது.

தனது ஆகாயவெளியை நோக்கி வந்த 16 சீன விமானங்களை இடைமறித்து அடையாளம் காண மலேசியா அதன் விமானப் படை விமானங்களை அனுப்பியது.

கடந்த திங்கட்கிழமை நேர்ந்த அந்தச் சம்பவம் பற்றி விளக்கமளிக்கும்படி, சீனத் தூதருக்கு அழைப்பு விடுக்கவிருப்பதாக மலேசிய வெளியுறவு அமைச்சர் ஹிஷாமுடின் ஹுசைன் தெரிவித்தார்.

நாடுகளுடன் நட்புறவு கொண்டிருப்பதால், தேசியப் பாதுகாப்பை மலேசியா விட்டுக்கொடுக்கும் எனப் பொருட்படாது என்றார் அவர். தன்மானத்தையும், அரசுரிமையையும் கட்டிக்காப்பதில் மலேசியா நிலையான கடப்பாடு கொண்டுள்ளதாய் ஹிஷாமுடின் கூறினார்.

இந்நிலையில், இராணுவ விமானங்கள் வழக்கமான பயிற்சியை மட்டுமே மேற்கொண்டதாக மலேசியாவில் உள்ள சீனத் தூதரகம் தெரிவித்துள்ளது. சர்வதேச சட்டத்தை, விமானங்கள் மீறவில்லை என்று அது தெரிவித்தது. எந்தவொரு நாட்டின் ஆகாயவெளிக்குள்ளும் அவை நுழையவில்லை என்பதையும் அது தெளிவுபடுத்தியது.

சீன இராணுவ விமானங்கள் மலேசிய ஆகாயவெளிக்குள் நுழையவில்லை; எனினும், அதன் கட்டுப்பாட்டுக்குள் உள்ள கடற்பகுதிக்கு மேல் அவை பறந்துசென்றன என்று ஹிஷாமுடின் சுட்டிக்காட்டினார்.

போர்னியோ தீவில் மலேசியாவுக்குச் சொந்தமான பகுதிக்கு அருகே அந்தச் சம்பவம் நடந்தது.

அங்குள்ள கடற்பகுதி யாருக்குச் சொந்தம் என்பதில் சீனாவுக்கும் மலேசியாவுக்கும் இடையே சர்ச்சை நிலவுகிறது.

Thu, 06/03/2021 - 06:44


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை