குழந்தைகளை அவர்களின் உலகில் வாழ இடமளியுங்கள்

முன்பள்ளி ஆசிரியைகளுக்கு கொடுப்பனவு வழங்கும் நிகழ்வில் பிரதமர் தெரிவிப்பு

முன்பள்ளியை போட்டித்தன்மை மிகுந்த கல்வி வழங்கும் மற்றொரு பாடசாலையாக மாற்றாமல் குழந்தைகளுக்கு சுற்றுச்சூழலை அனுபவிக்க இடமளிக்குமாறு பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷ நேற்று (17) அலரி மாளிகையில் வைத்து தெரிவித்தார்.

முன்பள்ளி ஆசிரியர்களுக்கு 2,500 ரூபாய் கொடுப்பனவை பெற்றுக்கொடுக்கும் 'குரு அபிமானி' தேசிய நிகழ்வில் கலந்து கொண்டு பிரதமர் இவ்வாறு குறிப்பிட்டார்.

கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் மற்றும் இராஜாங்க அமைச்சர் பியல் நிசாந்த ஆகியோர் கலந்துகொண்ட இந்நிகழ்வில் பிரதமர் மற்றும் பிரதமரின் பாரியார் திருமதி ஷிரந்தி ராஜபக்‌ஷ கொடுப்பனவுகளை வழங்கினர்.

இதன்போது பிரதமர் தொடர்ந்தும் உரையாற்றுகையில்,

கொவிட்19 நிலையைக் கருத்தில் கொண்டு, குழந்தைகளுக்கான நிகழ்ச்சிகளை ஒளிபரப்ப தொலைக்காட்சியால் ஒரு திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது. முன்பள்ளிகளை மீண்டும் தொடங்கும் போது, அந்த மலர்களைப் போன்ற குழந்தைகள் உங்களிடம் திரும்பி வருவார்கள். குழந்தைகளுக்காக வேலை செய்யும் உங்களிடம் ஒரு சிறிய கோரிக்கையை வைக்க விரும்புகிறேன்.

முன்பள்ளியை போட்டி கல்வியை வழங்கும் மற்றொரு பாடசாலையாக மாற்ற வேண்டாம். இந்த சூழலை குழந்தைகள் அனுபவிக்கட்டும். அவர்கள் தங்கள் உலகில் வாழட்டும். ஒருவேளை இந்த குழந்தைகளிடையே சிறப்புத் தேவைகள் உள்ள குழந்தைகள் இருக்கலாம். அவர்களையும்

கவனித்துக் கொள்ளுங்கள். அந்த குழந்தைகள் நல்லொழுக்கம், மற்றும் இரக்கம் பற்றி அறிய முன்பள்ளியை ஒரு புகலிடமாக மாற்றுமாறு கேட்டுக்கொள்கிறேன் எனத் தெரிவித்த பிரதமர், தொடர்ந்து உரையாற்றுகையில்,

முன்பள்ளி ஆசிரியர்களுக்கு முறையான ஆசிரியர் பயிற்சி அளிப்பதும் முக்கியம். அவர்களது அறிவை பல்கலைக்கழக மட்டத்திலிருந்து பட்டதாரி நிலை வரை வளர்த்துக் கொள்ள ஒரு வாய்ப்பை கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸை வழங்கியுள்ளார்.

பிள்ளைகளுடன் சிரித்து, பாடல் பாடி அவர்கள் மகிழ்ச்சியாக இருப்பதாகத் தோன்றும் ஆனால் முன்பள்ளி ஆசிரியர்களின் வாழ்க்கையைப் பார்க்கும்போது, அவர்கள் மிகவும் பரிதாபகரமான வாழ்க்கையை வாழ்கிறார்கள். அவர்களில் பலர் பொருளாதார ரீதியாக செல்வந்தர்கள் அல்ல. ஒரு சிலரைத் தவிர, முன்பள்ளி ஆசிரியர்களுக்கு ஒரு நிலையான சம்பளம் கிடைப்பதில்லை என்பதையும் நாங்கள் அறிவோம்.

முழு நாடும் கொரோனா தொற்றுநோயை எதிர்கொள்ளும் நேரத்தில் முன்பள்ளிகள் மூடப்பட்டுள்ளன. பெரும்பாலான முன்பள்ளி ஆசிரியர்கள் தங்கள் பிள்ளைகளின் பெற்றோரிடமிருந்து குறைந்த பணத்துடன் பராமரிக்கப்படுகிறார்கள். தற்போது அப்பணம் கிடைப்பதில்லை. இவை அனைத்தையும் கருத்தில் கொண்டு, இந்த முன்பள்ளி ஆசிரியரை ஒரு நிரந்தர சம்பளம் பெறும் தொழில்முறை நிலைக்கு கொண்டு வர முயற்சிக்கிறோம்.இந்த உதவித்தொகையைப் பெற 25,000 க்கும் மேற்பட்ட முன்பள்ளி ஆசிரியர்கள் ஏற்கனவே தகுதி பெற்றுள்ளனர் என்று இராஜாங்க அமைச்சர் பியல் நிசாந்த தெரிவித்தார். ஆனால் இந்த கொடுப்பனவைப் பெற முன்பள்ளி ஆசிரியர்கள் அதிகமுள்ளனர். தகுதி உள்ளவர்களுக்கு இந்த கொடுப்பனவை வழங்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று நம்புகிறேன்.

நாட்டின் ஒவ்வொரு கிராம சேவகர் பிரிவுக்கும் 24 இலட்சம் ரூபாய் மதிப்புள்ள முன்மாதிரியான தரப்படுத்தப்பட்ட முன்பள்ளியை வழங்குவதே எங்கள் குறிக்கோள். அது மட்டுமல்லாமல், முன்பள்ளிகளை நாங்கள் தனித்தனியாகப் ஆராய்ந்து பார்க்கிறோம். குறைந்தபட்ச வசதிகளுடன் கூடிய முன்பள்ளிகளை அடையாளம் கண்டு அபிவிருத்தி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.

குறித்த சந்தர்ப்பத்தில் பிரதமரின் பாரியார் திருமதி.ஷிரந்தி ராஜபக்ஷ, அமைச்சர்களான பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ், காமினி லொகுகே, இராஜாங்க அமைச்சர்களான பியல் நிசாந்த, சுசில் பிரேமஜயந்த, வஜித பேருகொட, பாராளுமன்ற உறுப்பினர்களான சாகர காரியவசம், கொரிய தூதுவர் வுன்ஜின் ஜியோங், பிரதமரின் செயலாளர் காமினி செனரத், கல்வி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரேரா, இராஜாங்க அமைச்சின் செயலாளர் கே.எம்.எஸ்.ரி ஜயசேகர உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Fri, 06/18/2021 - 08:22


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை