சிரிய போரினால் உயிரிழந்தோர் அரை மில்லியனை நெருங்கியது

கடந்த ஒரு தசாப்தமாக நீடிக்கும் சிரிய உள்நாட்டு யுத்தத்தில் சுமார் அரை மில்லியன் பேர் உயிரிழந்திருப்பதாக போர் கண்காணிப்புக் குழு ஒன்று நேற்று அறிவித்தது. இந்தப் போரில் அண்மைக் காலத்தில் உயிரிழந்த 100,000 பேரும் இதில் உள்ளடக்கப்பட்டுள்ளது.

2011 ஆம் ஆண்டு அரச எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் கொடிய முறையில் ஒடுக்கப்பட்ட நிலையில் ஏற்பட்ட உள்நாட்டுப் போரில் 494,438 பேர் இதுவரை உயிரிழந்திருப்பதாக பிரிட்டனைத் தளமாகக் கொண்ட மனித உரிமைகளுக்கான சிரிய கண்காணிப்பு குழு தெரிவித்துள்ளது.

கடந்த மார்ச் மாதத்தில் கண்காணிப்புக் குழுவால் முன்னர் வெளியிடப்பட்ட எண்ணிக்கையில் 388,000க்கும் அதிகமானவர்கள் உயிரிழந்திருப்பதாக கூறப்பட்டிருந்தது.

இந்நிலையில் மேலும் 105,015 பேர் உயிரிழந்திருப்பது போர் கண்காணிப்பாளர்களால் பின்னர் உறுதி செய்யப்பட்டது.

‘இதில் அதிகமான உயிரிழப்புகள் 2012 முடிவு தொடக்கம் 2015 நவம்பர் மாதத்திற்கு இடையே இடம்பெற்றுள்ளது’ என்று கண்காணிப்புக் குழுவின் தலைவர் ரமி அப்தல் ரஹ்மான் ஏ.எப்.பி செய்தி நிறுவனத்திடம் தெரிவித்துள்ளார்.

அண்மையில் உறுதி செய்யப்பட்ட உயிரிழப்புகளில் 42,000க்கும் அதிகமானவர்கள் பொதுமக்களாவர். இவர்களில் பெரும்பாலானவர்கள் சிரிய அரசின் சிறைச்சாலைகளில் சித்திரவதைக்கு உட்படுத்தப்பட்டு கொல்லப்பட்டவர்களாவர்.

இந்த உள்நாட்டுப் போரில் சிரியாவின் பெரும்பகுதியை அரச படையால் கைப்பற்ற முடிந்ததோடு வடமேற்கின் இத்லிப் பிராந்தியத்தில் இருக்கும் பிரதான போர் முனையில் தொடர்ந்து போர் நிறுத்தம் ஒன்று அமுலில் இருக்கும் நிலையில் தற்போது வன்முறை முன்னெப்போதுமில்லாத அளவுக்கு குறைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Wed, 06/02/2021 - 14:02


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை