ஏழை நாடுகளில் தடுப்பூசி பற்றாக்குறை

உலக சுகாதார நிறுவனம் கவலை

ஏழை நாடுகளில் நிலவி வரும் தடுப்பூசி பற்றாக்குறை, கவலையளிக்கும் வகையில் உள்ளதாக உலக சுகாதார நிறுவனத்தின் தலைவர் டெட்ரோஸ் அத னோம் தெரிவித்துள்ளார்.

உலகம் முழுவதும் கொரோனா தொற்றுக்கு எதிராக தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. வளர்ந்த நாடுகளிடம் இருந்து தடுப்பூசிகளை கொள்முதல் செய்து வளர்ந்து வரும் நாடுகளுக்கும், ஏழை நாடுகளுக்கும் வழங்குவதற்காக ‘கோவேக்ஸ்’ என்ற திட்டத்தை உலக சுகாதார நிறுவனம் செயல்படுத்தி வருகிறது.

இந்த கோவேக்ஸ் திட்டத்தின் மூலம் இதுவரை 132 நாடுகளுக்கு 9 கோடி தடுப்பூசிகள் பகிர்ந்து அளிக்கப்பட்டுள்ளன. ஆனால் இந்தியாவில் கொரோனா 2-வது அலை தீவிரமானதால், தடுப்பூசி ஏற்றுமதியை இந்தியா நிறுத்தி வைத்தது.

இதன் காரணமாக கோவேக்ஸ் திட்டத்தில் தடுப்பூசிக்கு பெருமளவில் பற்றாக்குறை ஏற்பட்டது.

இது தவிர மேலும் சில வளர்ந்த நாடுகள் கொரோனா தடுப்பூசிகளை ஏழை நாடுகளுடன் பகிர்ந்து கொள்ள தயக்கம் காட்டுவதாகவும், இது மிகவும் கவலையளிக்கும் வகையில் உள்ளது என்றும் உலக சுகாதார நிறுவனத்தின் தலைவர் டெட்ரோஸ் அதனோம் தெரிவித்துள்ளார். இது குறித்து செய்தியாளர் சந்திப்பின் போது பேசிய அவர்,

‘ஏழை நாடுகளுக்கு தடுப்பூசிகளை வழங்கினால், அவை சரியாக பாதுகாக்கப்படாமல் வீணாகிவிடும் என்று சில நாடுகள் கவலைப்படுவது, ஒரு காலணிய மனநிலையை காட்டுகிறது’ என்று குறிப்பிட்டார்.

மேலும் வளர்ந்து வரும் நாடுகளிலும், ஆபிரிக்கா உள்ளிட்ட நாடுகளிலும் தடுப்பூசிகளை சேமித்து வைக்கவும், அவற்றை பொதுமக்களுக்கு செலுத்தவும் நல்ல கட்டமைப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்த அவர், வளர்ந்த நாடுகள் கோவேக்ஸ் திட்டத்தில் தடுப்பூசிகளை பகிர்ந்து கொள்ள வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார்.

 

Mon, 06/28/2021 - 14:42


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை