பசிலை தேசிய பட்டியல் எம்.பியாக நியமிக்க கோரிக்கை

ஜனாதிபதி, பிரதமரிடம் SLPP  பின்வரிசை எம்.பிக்கள் வேண்டுகோள்​

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தேசிய அமைப்பாளர் பசில் ராஜபக்ஷவை உடனடியாக தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்பினராக நியமிக்க வேண்டுமென ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஆகியோரிடம் கோரிக்கை விடுக்க பொதுஜன பெரமுன பின்வரிசை பாராளுமன்ற உறுப்பினர்கள் குழுவினர் நேற்று தீர்மானத்துள்ளனர்.

பாராளுமன்ற உறுப்பினர் பிரமீத பண்டார தென்னகோனின் தெஹிவளை இல்லத்தில் நேற்றுக் கூடிய இவர்கள் இத் தீர்மானத்தை எடுத்துள்ளதாகவும் அடுத்த சில நாட்களில் ஜனாதிபதி மற்றும் பிரதமருக்கு இது தொடர்பாக எழுத்து மூலம் இந்த கோரிக்கையை முன்வைக்கவுள்ளதாக இச்சந்திப்பில் கலந்துகொண்ட பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் தினகரனுக்குத் தெரிவித்தார்.

பிரமீத பண்டார தென்னகோன்,கோகிலா ஹர்ஷனி குணவர்த்தன, மிலான் ஜயதிலக்க, சஹன் பிரதீப், திஸ்ஸ குட்டியாராச்சி உள்ளிட்ட பின் வரிசை பாராளுமன்ற உறுப்பினர்கள் பலர் இந்த சந்திப்பில் கலந்துகொண்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். அத்துடன் பாராளுமன்றத்துக்கு வருமாறு சிரேஷ்ட அமைச்சரவை அமைச்சர்கள் சிலரும் பசில் ராஜபக்ஷவுக்கு நேற்று அழைப்பு விடுத்திருந்ததாக அமைச்சரவையின் சிரேஷ்ட உறுப்பினர் ஒருவரும் தெரிவித்தார்.

பிரசன்ன ரணதுங்க, காமினிலொக்குகே, ரோஹித அபேகுணவர்த்தன உள்ளிட்ட அமைச்சரவை அமைச்சர்களும் இராஜாங்க அமைச்சர்கள் சிலரும் இந்த வேண்டுகோளை விடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தேசிய அமைப்பாளரும் முன்னாள் அமைச்சருமான பசில் ராஜபக்ஷ, பெரும்பாலும் எதிர்வரும் ஜூலை மாதம் 08 ஆம் திகதி பாராளுமன்ற உறுப்பினராக பாராளுமன்றத்தில் சத்தியப்பிரமாணம் செய்வாரென அமைச்சரவையின் சிரேஷ்ட அமைச்சரவை உறுப்பினரொருவர் தெரிவித்தார். ஜனாதிபதி மற்றும் பிரதமர் தலைமையில் நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் நாட்டைக் கட்டியெழுப்பும் வேலைத்திட்டத்துக்கு பசில் ராஜபக்ஷவின் பங்களிப்பு மிகவும் அத்தியாவசிய மானது என்பதால் தாம் இந்த தீர்மானத்துக்கு வந்ததாக பின் வரிசை பாராளுமன்ற உறுப்பினர்கள் குழுவின் பேச்சாளர் தெரிவித்தார். 2005 – 2015 காலத்தில் நாட்டின் அபிவிருத்தி மற்றும் பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதற்காக பசில் ராஜபக்ஷ வழங்கிய பங்களிப்பை கருத்தில் கொண்டால் இவ்வாறான ஒருவர் ஆளும் தரப்பில் பாராளுமன்ற உறுப்பினராக ஒரு அமைச்சராக இருப்பது மிகவும் பயனுள்ளதாக இருக்குமென்றும் அந்தப் பேச்சாளர் தெரிவித்தார்.

Mon, 06/28/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை