மீனவர் எதிர்நோக்கும் எரிபொருள் பிரச்சினைகளுக்கு நியாயமான தீர்வு

ஆழ்கடல் மீன்பிடிப்படகுகளின்  உரிமையாளர்கள் சந்திப்பில் அமைச்சர் டக்ளஸ் உறுதி

 எரிபொருள் விலையேற்றத்தினால் நாடு முழுவதும் கடற்றொழிலாளர்கள் தெரிவித்து வரும் கருத்துகள் நியாயமான முறையில் பரிசீலிக்கப்படுமென்று தெரிவித்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஆழ்கடல் மீன்பிடியில் ஈடுபடுவோரின் பிரச்சினைகள் தீர்த்து வைக்கப்படுமெனவும் உறுதியளித்துள்ளார்.

ஆழ்கடல் மீன்பிடி வள்ளங்களின் உரிமையாளர்களுடன் நேற்று (28) நடைபெற்ற கலந்துரையாடலின் போதே அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இவ்வாறு உறுதியளித்துள்ளார். மாளிகாவத்தையிலுள்ள அமைச்சு அலுவலகத்தில் நடைபெற்ற கலந்துரையாடலின்போது,

எரிபொருள் விலையேற்றத்தினால் கடற்றொழிலாளர்களுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்புக்கள் தொடர்பாக சுட்டிக்காட்டிய ஆழ்கடல் மீன்பிடிப்படகுகளின் உரிமையாளர்கள், எரிபொருள் மானியம் தொடர்பாக கடற்றொழில் அமைச்சர் கவனம் செலுத்த வேண்டுமெனவும் தெரிவித்தனர்.

ஆழ்கடல் மீன்பிடி படகுகளுக்கான வி.எம்.எஸ். கண்காணிப்புக் கருவிகள் பொருத்தும் செயற்பாடுகள் விரைவுபடுத்தப்பட வேண்டுமெனவும், அவுஸ்ரேலியாவினால் வழங்க உறுதியளிக்கப்பட்ட வி.எம்.எஸ் கருவிகள் முன்னுரிமை அடிப்படையில் பொருத்தப்பட வேண்டுமெனவும் ஆழ்கடல் மீன்பிடி வள்ளங்களின் உரிமையாளர்களினால் வேண்டுகோள் முன்வைக்கப்பட்டது.

அத்துடன், அரபுக் கடலுக்கு தொழில் நடவடிக்கைகளுக்காக செல்லுகின்ற இலங்கை கடற்றொழிலாளர்கள், இந்தியாவுக்கும் மாலைதீவுக்குமிடையிலான கடற்பரப்பில் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பாவும் கலந்துரையாடலில் கடற்றொழில் அமைச்சருக்கு தெளிவுபடுத்தப்பட்டதுடன், இந்தியா, சிசல்ஸ், மாலைதீவு, அந்தமான் போன்ற நாடுகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள மற்றும் விடுதலை செய்யப்பட்டுள்ள இலங்கை கடற்றொழிலாளர்களை நாட்டுக்கு அழைத்து வருவதற்கு விரைவான நடவடக்கை மேற்கொள்ளப்பட வேண்டுமெனவும் கோரிக்கை முன்வைக்கப்பட்டது.

எரிபொருள் விலையேற்றத்தினால் கடற்றொழிலாளர்களுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்புக்கள் தொடர்பாக சுட்டிக்காட்டிய ஆழ்கடல் மீன்பிடிப்படகுகளின் உரிமையாளர்கள், எரிபொருள் மானியம் தொடர்பாக கடற்றொழில் அமைச்சர் கவனம் செலுத்த வேண்டுமெனவும் தெரிவித்தனர். ஆழ்கடல் மீன்பிடிப் படகுகளின் உரிமையாளர்களின் கருத்துக்களை கேட்டறிந்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா,

அண்மையில் ஏற்பட்ட எரிபொருள் விலையேற்றம் தொடர்பாக அமைச்சரவையில் பிரஸ்தாபிக்கப்பட்ட போது, மண்ணெண்ணெய் விலையை 35 ரூபாவினால் அதிகரிப்பதற்கு துறைசார் தரப்புக்களினால் விருப்பம் தெரிவிக்கப்பட்டது, கடற்றொழில் அமைச்சின் வலியுறுத்தல் காரணமாகவே 07 ரூபாயாக மாற்றம் செய்யப்பட்டதாகவும் தெரிவித்தார்.

எவ்வாறெனினும், இவ் விடயம் தொடர்பான கடற்றொழிலாளர்களின் கருத்துக்கள் பரிசீலிக்கப்பட்டு நியாயமான முறையில் நிவாரணம் வழங்க அரசாங்கம் நடவடிக்கை மேற்கொள்ளும் எனவும் உறுதியளித்தார்.

அதேபோன்று, ஆழ்கடல் மீன்பிடித் தொழிலில் ஈடுபடுவோர் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் மற்றும் எதிர்பார்ப்புக்கள் தொடர்பாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷ ஆகியோரின் ஆலோசனைகளைப் பெற்று தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் எனவும் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா உறுதியளித்தார்.

 

Tue, 06/29/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை