கடவுச்சீட்டுகள் வழங்கும் சேவைகள்; திணைக்கள அறிவுறுத்தல் வெளியீடு

குடிவரவு, குடியகல்வுத் திணைக்களத்தின் பத்தரமுல்லை பிரதான அலுவலகத்தின் மூலமும் அதேபோன்று மாத்தறை, வவுனியா, கண்டி, குருணாகல் ஆகிய பிராந்திய அலுவலகங்கள் மூலமும் சகல சுகாதாரப் பாதுகாப்பு வழிகாட்டல் களையும் பேணியவாறு, மட்டுப்படுத்தப்பட்ட வகையில் வெளிநாட்டுக் கடவுச் சீட்டு வழங்கல் சேவையை முன்னெடுப்பதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய அத்தியாவசிய தேவையுள்ள சேவைபெறுனர்கள் மாத்திரம் கீழே தரப்பட்டுள்ள தொலைபேசி இலக்கங்களுக்குத் தொடர்புகொண்டு, திகதியை முன்பதிவு செய்து கொண்டு தமக்கு அண்மையிலுள்ள அலுவலகத்துக்கு வருகை தர முடியும் என குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்தின் கட்டுப்பாட்டாளர் நாயகம் தெரிவித்திருக்கிறார்.

அதேவேளை மேற்குறிப்பிட்டவாறு திகதியை முன்பதிவு செய்துகொள்ளாமல் வருகைதருபவர்கள் அலுவலக வளாகத்துக்குள் பிரவேசிப்பதற்கு அனுமதி வழங்கப்பட மாட்டாது என்றும் அவர் மேலும் சுட்டிக்காட்டியிருக்கிறார்.

மேலும் தற்போது தனிமைப்படுத்தல் சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ள பிரதேசங்களில் வசிக்கும் பொதுமக்கள் இச்சந்தர்ப்பத்தில் குடிவரவு, குடியகல்வுத் திணைக்களத்தின் அலுவகங்களுக்கு வருகை தருவதைத் தவிர்த்துக் கொள்ளுமாறும் அவர் வலியுறுத்தியிருக்கிறார். அதன்படி பத்தரமுல்லை அலுவலகம் மு.ப 9 மணி தொடக்கம் பி.ப 1 மணிவரை திறக்கப்படும். அக்காலப்பகுதியில் ஒருநாள் மற்றும் சாதாரணசேவை கடவுச்சீட்டுகளைப் பெற்றுக் கொள்வதற்கான விண்ணப்பங்களை ஒப்படைப்பதற்கு 070-7101070 அல்லது 070-7101060 ஆகிய தொலைபேசி இலக்கங்களுக்குத் தொடர்புகொண்டு நாளொன்றை முன்பதிவு செய்துகொள்ள முடியும்.

அதேபோன்று மேற்படி சேவையை வழங்கும் நோக்கில் பிராந்திய அலுவலகங்கள் மு.ப 9 மணி தொடக்கம் பி.ப 1 மணிவரை திறக்கப்படும். அதன்படி மாத்தறை பிராந்திய அலுவலகத்துக்கு 041-5412212, 041-5104444 ஆகிய இலக்கங்கள் மூலமும், கண்டி பிராந்திய அலுவலகத்துக்கு 081-5624509, 081-5624470 ஆகிய இலக்கங்கள் மூலமும், வவுனியா பிராந்திய அலுவலகத்துக்கு 025-5676344, 025-5676345 ஆகிய இலக்கங்கள் மூலமும் குருணாகல் பிராந்திய அலுவலகத்துக்கு 037-5550562, 037-5550563 ஆகிய இலக்கங்கள் மூலமும் தொடர்புகொண்டு நாளொன்றை முன்பதிவு செய்துகொண்டு செல்லமுடியும்.

மேலும் நாடளாவிய ரீதியில் உள்ள கொவிட் – 19 தொற்றுப்பரவல் நிலைவரத்துக்கு மத்தியில் அனைத்து சேவைகளையும் வழங்கும்போது அவ்வப்போது அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்படும் கொள்கைத் தீர்மானங்கள், ஊரடங்குச் சட்ட அமுலாக்கம், பயணக்கட்டுப்பாட்டு நடைமுறைகள் ஆகியவை கருத்திற்கொள்ளப்படும். எனவே அவற்றுக்கமைய சேவைவழங்கல் தீர்மானங்களில் மாற்றங்கள் நிகழலாம் என்றும் குடிவரவு, குடியகல்வுத் திணைக்களத்தின் கட்டுப்பாட்டாளர் நாயகம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

 

Sat, 06/26/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை