இலங்கையின் இறையாண்மையில் தலையிட எவருக்கும் உரிமையில்லை

அழுத்தம் பிரயோகிக்க ஐரோப்பிய ஒன்றியத்தால் முடியாது

ஜி.எஸ்.பி.பிளஸ் வரிச்சலுகையுடன் தொடர்புடைய விடயங்களில் காணப்படும் குறைபாடுகள் தொடர்பில் தெரிவிக்கப்பட்டால் அதனை ஏற்றுக் கொள்ள அரசாங்கம் தயாராக இருக்கிறது. மாறாக இலங்கையின் இறையாண்மையை சவாலுக்கு உட்படுத்தி அரசியலமைப்பில் காணப்படும் நிபந்தனைகளில் மாற்றம் செய்யுமாறு அழுத்தம் பிரயோகிப்பதற்கு ஐரோப்பிய ஒன்றியத்துக்கு தார்மீக உரிமை கிடையாதென அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார்.

அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் நேற்றைய (15) வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அமைச்சர் இதனைத் தெரிவித்தார். அவர் மேலும் குறிப்பிடுகையில் ,

ஜி.எஸ்.பி. பிளஸ் வரிசலுகை ஆடை தொழிற்துறை மற்றும் இலங்கையிலிருந்து ஐரோப்பிய நாடுகளுக்கான ஏற்றுமதி உள்ளிட்ட விடயங்களில் பிரதானமாக தாக்கம் செலுத்துகின்றது. இலங்கை சுயாதீனமானதொரு நாடு. எமது நாடு அரசிலமைப்புக்கு ஏற்பவே நிர்வகிக்கப்படுகிறது.

அரசியலமைப்பு, மக்களின் இறையாண்மைக்கு உட்பட்ட அடிப்படையிலேயே செயற்படுத்தப்படுகிறது. மக்கள் இறையாண்மை நிறைவேற்றதிகாரத்துறை, சட்டவாக்கத்துறை மற்றும் நீதித்துறை என்பவற்றால் நடைமுறைப்படுத்தப்படுகிறது.

இவற்றுக்குள் உள்ளடங்கியுள்ள மக்களின் உரிமைகளை பாதுகாத்தல் உள்ளிட்ட விடயங்கள் முன்னெடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

Wed, 06/16/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை