அமெரிக்க தடுப்பூசிகள் மாத இறுதிக்குள் நாட்டுக்கு

அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவிப்பு

 

அமெரிக்காவால் ஆசிய நாடுகளுக்கு வழங்கப்படும் ஏழு மில்லியன் தடுப்பூசிகளில் ஒரு தொகுதி  இலங்கைக்கு இம்மாத இறுதியில் கிடைக்குமென இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார். அமெரிகாவின் பூகோள தடுப்பூசித் திட்டத்தின் கீழ் 25 மில்லியன் தடுப்பூசிகள் வழங்கப்படவுள்ளன. இதில் 7 மில்லியன் தடுப்பூசிகள் ஆசிய நாடுகளுக்கு வழங்கப்படவுள்ளன. முதல் சுற்றில் தடுப்பூசியை பெற்றுக்கொள்ளும் நாடுகளின் பட்டியலில் இலங்கையையும் அமெரிக்கா உள்ளடக்கியுள்ளது. அமெரிக்காவால் வழங்கப்படும் தடுப்பூசி யாதென இதுவரை உத்தியோகப்பூர்வமாக எமக்கு அறிவிக்கப்படவில்லை. என்றாலும் இம்மாத இறுதியில் குறித்த தடுப்பூசிகள் கிடைக்கப்பெறும் என அறிய முடிகிறது. என்றாலும் நாம் அமெரிக்காவிடம் ஒரு கோரிக்கையை முன்வைத்துள்ளோம். அதாவது, அஸ்ட்ரா செனெகா முதல் தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளவர்களுக்கு இரண்டாவது தடுப்பூசியை பெற்றுக்கொடுப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதால் எமக்கு அஸ்ட்ரா செனெகா தடுப்பூசிகளை பெற்றுக்கொடுக்குமாறே கோரியுள்ளோம். அமெரிக்கா இந்த கோரிக்கையை ஏற்றுக்கொள்ளுமென்ற நம்பிக்கை எமக்குள்ளது.

இதேவேளை, சைனோபாம் தடுப்பூசியைப் பெற்றுக் கொண்டவர்களுக்கு இரண்டாவது டோஸ் வழங்கும் நடவடிக்கை எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமையிலிருந்து ஆரம்பிக்கப்படவுள்ளன. நாட்டின் சனத்தொகையில் 145 இலட்சம் பேருக்கு கொவிட் தடுப்பூசிகளை வழங்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. தடுப்பூசிகளைப் பெற்றுக் கொள்வதற்காக கடந்த ஆகஸ்ட் மாதத்திலிருந்து தேவையான நடவடிக்கைகளை அரசாங்கம் மேற்கொண்டிருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

 

 

லோரன்ஸ் செல்வநாயகம், சுப்பிரமணியம் நிஷாந்தன்

Sat, 06/05/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை