ஒன்லைன் மூலமான கல்வி வசதிக்கு பிரதேசவாரியாக கல்வி நிலையங்கள்

வசதியில்லாத மாணவர்களுக்காக கல்வியமைச்சு ஆரம்பிக்கிறது

ஒன்லைன் மூலமாக கல்வி வசதிகளை பெற்றுக் கொள்ள முடியாத மாணவர்களுக்காக பிரதேச வாரியாக கல்வி கற்கை மத்திய நிலையங்களை ஆரம்பிப்பதற்கு கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது.

நாட்டில் நிலவும் கொரோனா தொற்று சூழ்நிலை காரணமாக கல்வியமைச்சு ஒன்லைன் மூலமாக பாடசாலைக் கல்வியை வழங்கி வருகிறது. இந்த வசதிகளை பெற்றுக் கொள்ள முடியாத மாணவர்களுக்காகவே பிரதேச வாரியாக கல்வி கற்கை மத்திய நிலையங்களை ஆரம்பிப்பதற்கு தீர்மானித்துள்ளதாக கல்வியமைச்சர் பேராசிரியர் ஜீ. எல் பீரிஸ் நேற்று தெரிவித்தார்.

தகவல் திணைக்களத்தில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் விளக்கமளிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

அது தொடர்பில் மேலும் தெரிவித்துள்ள அமைச்சர்:

நாட்டில் நிலவும் கொரோனா வைரஸ் சூழ்நிலை காரணமாக பாடசாலைகளை கல்வி நடவடிக்கைகளுக்காக திறக்க முடியாத நிலை காணப்படுகின்றது. தொடர்ச்சியாக ஒன்லைன் மூலமாக மட்டுமே கல்வி கற்கைகள் மாணவர்களுக்கு வழங்கப்படுகின்றது.

குருகெதர, ஈ. தக்சலாவ மூலமாகவும் வானொலிகள் மற்றும் ஊடகங்கள் மூலம் பிள்ளைகளுக்கு கல்வி கற்கும் வசதிகள் அரசாங்கத்தினால் பெற்றுக் கொடுக்கப்பட்டுள்ளது.

அதன்மூலம் இரண்டரை இலட்சம் மாணவர்கள் தினமும் கல்வி கற்று வருவதுடன் கடந்த மாதத்தில் 3.5 மில்லியன் பேர் பங்குபற்றியுள்ளனர்.

குருகெதர செயற்திட்டம் சிங்கள மொழியில் செனல் ஐ தொலைக்காட்சி அலைவரிசையிலும் தமிழ்மொழி மூலமான பாடங்கள் நேத்ரா தொலைக்காட்சியிலும் வழங்கப்பட்டு வருகின்றன.

தினந்தோறும் 16 மணிநேரம் என தொடர்ந்து 05 தினங்களுக்கு இந்த திட்டம் நடைமுறைப்படுத்தப்படும். மூன்றாம் வகுப்பிலிருந்து உயர் வகுப்பு வரை 5,000 இறுவட்டுக்கள் தயாரிக்கப்பட்டு அதற்கான சேர் திட்டம் சிறப்பாக முன்னெடுக்கப்பட்டு வருகிறது. அந்த அனுமதிக்காக எந்த ஒரு கட்டணம் அறவிடப்படுவதில்லை. தேசிய கல்வி நிறுவகத்தினால் ஒரு தரப்படுத்தலின் கீழ் திட்டம் நடைமுறைப்படுத்தப்படுகிறது. அதற்கிணங்க மாகாண, வலய, பாடசாலை வகுப்புகள் சமூக வலைத்தளங்கள் மற்றும் இலத்திரனியல் ஊடகங்கள் மூலம் விடயம் சார்ந்த பணிப்பாளர்களின் கண்காணிப்புடன் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. எனினும் நாட்டில் 12 வீதமான மாணவர்களுக்கு இதன் பயன்களை பெற முடியாத நிலை உள்ளது. அதனை நிவர்த்தி செய்யும் வகையில் கல்வி அமைச்சினால் பிரதேச கற்கை மத்திய நிலையங்களை நிறுவுவதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

கடந்த 17ஆம் திகதி அனைத்து மாகாண கல்வி பணியாளர்களுக்கு அது தொடர்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. சுகாதார வழிமுறைகளை பின்பற்றி சிறு குழுக்கள் மூலம் கிராமிய ரீதியில் கற்கை செயற்பாடுகளை ஆரம்பிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கல்வி மறுசீரமைப்பு, திறந்த பல்கலைக்கழகம், ஒன்லைன் கல்வி மேம்பாட்டுக்கான இராஜாங்க அமைச்சு, மகளிர் மற்றும் சிறுவர் அபிவிருத்தி, ஆரம்பப் பாடசாலை மற்றும் கனிஷ்ட கல்வி மற்றும் பாடசாலை உட்கட்டமைப்பு வசதிகள் இராஜாங்க அமைச்சு உள்ளிட்ட சில நிறுவனங்கள் இணைந்து அதற்கான திட்டங்களை வகுத்துள்ளன. அந்த கற்கை நிலையங்கள் காலை 07 மணி தொடக்கம் பிற்பகல் 03.00 மணி வரை திறப்பதற்கும் தீர்மானிக்கப் பட்டுள்ளது. அத்துடன் அந்த மத்திய நிலையங்களுக்கு மடிக் கணினி உள்ளிட்ட உபகரணங்களை பெற்றுக் கொடுப்பதற்கும் நடவடிக்கை எடுத்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.(ஸ)

லோரன்ஸ் செல்வநாயகம்

Tue, 06/22/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை