சிறைகளிலுள்ள தமிழ் இளைஞர்கள் விரைவாக விடுவிக்கப்படவேண்டும்

பாராளுமன்றில் விசேட கூற்றை முன்வைத்து அமைச்சர் நாமல் உரை

நீதியமைச்சரிடம் அமைச்சர் நாமல் விசேட வேண்டுகோள்

புலிகளுடன் தொடர்புடையவர்களென்ற சந்தேகத்தின் பேரில் சிறைச்சாலைகளில் தடுத்துவைக்கப்பட்டுள்ளவர்களுக்கும் நீதி கிடைக்கவேண்டும். அவர்களை விடுதலை செய்வதற்கான நடவடிக்கை துரிதப்படுத்தப்பட வேண்டுமென இளைஞர் விவகார மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்‌ஷ தெரிவித்தார்.

சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன மற்றும் நீதி அமைச்சர் அலி சப்ரி ஆகியோரிடம் பாராளுமன்றத்தில் நேற்று விசேட கூற்றை முன்வைத்து உரையாற்றும் போதே அமைச்சர் நாமல் ராஜபக்‌ஷ இவ்வாறு கூறினார்.

அவர் மேலும் கூறியதாவது,

"வழக்குகளில் ஏற்பட்டுள்ள தாமதம் மற்றும் வழக்குகளை நிறைவு செய்ய முடியாததால் பல இளைஞர்கள் இன்று சிறைச்சாலைகளில் இருக்கின்றனர். குறிப்பாக தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்புடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் கைதானவர்கள் பல வருடங்களாக சிறைச்சாலைகளில் உள்ளனர். நல்லாட்சியின்போது நானும் சிறையில் அடைக்கப்பட்டேன். அதன்மூலம் சிறைச்சாலைகளில் உள்ள நிலைவரத்தை அறிய முடிந்தது. சிறைச்சாலைகளில் அடைக்கப்படுபவர்கள் எவ்வாறு துன்பப்படுவார்கள் என்பதை கற்பதற்கான சூழ்நிலையை நல்லாட்சி அரசே வழங்கியதென இன்றும் என் தந்தையிடம் கூறுவேன்.

புலிகள் அமைப்புடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின்பேரில் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருப்பவர்களில், வழக்கு விசாரணை முடிவடைந்து தண்டனை அனுபவிப்பவர்களின் எண்ணிக்கை 35 ஆகும். இந்த 35 பேரிலும் பெரும்பாலானவர்கள், தமக்கு கிடைத்த தண்டனை காலத்தைவிடவும், அதிக வருடங்களை சிறைகளில் கழித்துள்ளனர். அத்துடன், மேலும் 38 பேருக்கு மேல் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இவர்கள் தொடர்பான வழக்குகள்கூட 20 வருடங்களாக நடைபெற்றுள்ளன. இவர்கள் சிறைகளில் அடைக்கப்பட்டிருக்கும் நிலையில்தான் வழக்கு விசாரணை தொடரும். அதேபோல வழக்கு விசாரணை எதுவுமின்றி தடுத்துவைக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை 13 ஆகும். வழக்கு விசாரணை முடிவடைந்து குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படாத 116 பேரும் சிறைகளில் இருக்கின்றனர்.

இவர்களுக்கு தவறான வரலாறு இருந்திருக்கலாம். சிலர் தெரியாமல் இவ்வாறான நடவடிக்கையில் ஈடுபட்டிருக்கலாம். ஆனால் அவர்கள் பல வருடங்களாக சிறைகளில் உள்ளனர். இவர்களுக்கு நீதி கிடைக்க வேண்டும். எனவே, ஒன்று வழக்கு விசாரணைகளை துரிதப்படுத்தி , குற்றப்பத்திரிகை தாக்கல் செய்து தண்டனை வழங்கப்பட வேண்டும். அவ்வாறு இல்லாவிட்டால் மாற்று நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும்.

மஹிந்த ராஜபக்ஷ ஆட்சிகாலத்தில் 12 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் புனர்வாழ்வளிக்கப்பட்டு சமூகமயப்படுத்தப்பட்டனர். அவர்களில் 03 ஆயிரத்து 500 பேருக்கு சிவில் பாதுகாப்பு படையில் அரச வேலை வழங்கப்பட்டது. இவர்கள் இறுதிப்போரில் பங்கேற்றவர்கள்.ஆனால் சிறைகளில் உள்ளவர்களில் சிலர் எனது வயதை விட அதிக காலம் சிறைத் தண்டனை அனுபவித்துவருகின்றனர். இதுதான் உண்மைக் கதையும்கூட.

உதாரணமாக பிரபுக்கள் கொலை குற்றச்சாட்டில் ஒருவர் கைது செய்யப்பட்டிருந்தார். அவரின் கதையைக் கேட்டபோது, மரக்கிளையொன்றை வெட்டியதால் சிறை தண்டனை வழங்கப்பட்டுள்ளது. ஆனால் திட்டம் வகுத்த பிரதான சந்தேகநபர் பொதுமன்னிப்பு வழங்கி வீட்டுக்கு அனுப்பட்டுள்ளார். கிளை வெட்டியவர் குற்றவாளியாக உள்ளே இருக்கின்றார்.

எனவே, 12 ஆயிரத்து 500 பேருக்கு புனர்வாழ்வளித்து அவர்களில் 03 ஆயிரத்து 500 பேரை சிவில் பாதுகாப்பு படையணியில் இணைக்க முடியுமென்றால், இவர்களுக்கு நீதி கிடைப்பது பற்றியும் கவனம் செலுத்தப்படவேண்டும்.

இவர்களுக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளின் பிரகாரம் நீதிமன்றத்தால் பிணை வழங்கமுடியாது. சட்ட மாஅதிபர் ஊடாக அல்லது புனர்வாழ்வளித்தாவது நீதி வழங்கப்படவேண்டும். ஏனெனில் நாட்டு மக்கள் எவருக்கும் அநீதி இழைக்கப்படக்கூடாது என்பதே இந்த அரசின் நிலைப்பாடாகும் " - என்றார்.

ஷம்ஸ் பாஹிம், சுப்பிரமணியம் நிஷாந்தன்

 

Wed, 06/23/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை