பசிலின் பாராளுமன்ற வருகை; பதவி ஏற்கும் தினத்தை பகிரங்கமாக அறிவிப்போம்

SLPP செயலாளர் சாகர காரியவசம் தெரிவிப்பு

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் பசில் ராஜபக்ஷ பாராளுமன்ற உறுப்பினராக பதவி ஏற்கும் தினத்தை பகிரங்கமாக அறிவிப்போம். இரகசியமான முறையில் அவர் ஒருபோதும் பாராளுமன்றம் வர மாட்டார் என ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்தார்

பொதுஜன பெரமுனவின் அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு பேசும்போதே மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில்,

பொருளாதார ரீதியில் நாட்டு மக்கள் பெரும் அசௌகரியங்களை எதிர் கொண்டுள்ள வேளையில் எரிபொருளின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளது. இதனை கருத்திற் கொண்டே எரிபொருள் விலையேற்றத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தோம். குறிப்பிட்ட விடயத்தில் எவ்வித மாற்றமும் கிடையாது. அந்த நிலைப்பாட்டில் இன்றும் உறுதியாக இருக்கிறோம். ஸ்ரீலங்கா பொதுஜன

பெரமுன கட்சியை தலைமைத்துவமாக கொண்டுள்ள ஸ்ரீலங்கா சுதந்திர பொதுஜன கூட்டணியில் ஒரு சில முரண்பாடுகள் காணப்படுகின்றன. பல பங்காளிக’ கட்சிகளை ஒன்றினைத்து கூட்டணி அமைக்கும் போது கருத்து முரண்பாடுகள் தோற்றம் பெறுவது இயல்பு.

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர், முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ச நாடாளுமன்ற உறுப்பினராக பதவி ஏற்பது குறித்து மாறுப்பட்ட பல கருத்துக்கள் தற்போது குறிப்பிடப்படுகின்றன. அவருக்காக தேசிய பட்டியல் பாராளுமன்ற ஆசனத்தை வழங்க பொதுஜன பெரமுனவின் தேசிய பட்டியல் உறுப்பினர்கள் தயாராக உள்ளார்கள். பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் பசில் ராஜபக்ஷ பாராளுமன்ற உறுப்பினராக பதவி ஏற்கும் தினம் பகிரங்கமாக அறிவிக்கப்படும். இரகசியமான முறையில் அவர் பாராளுமன்றம் வரமாட்டார். அதற்கான அவசியமும் கிடையாது. பாராளுமன்ற உறுப்பினர் ரணில் விக்கிரமசிங்க பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் நிழல் போல செயற்படுவதாக போலியான குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்படுகின்றன. ஐக்கிய மக்கள் சக்தியினருடனும், பாராளுமன்ற உறுப்பினர் ரணில் விக்கிரமசிங்கவுடனும் டீல் அரசியல் செய்ய வேண்டிய தேவை அரசாங்கத்திற்கு கிடையாது என்றும் அவர் தெரிவித்தார்.

கடந்த அரசாங்கத்தின் வீழ்ச்சியடைந்த பொருளாதாரத்தை கட்டியெழுப்ப நடவடிக்கை எடுத்தவர். அவரது பணிகளை இந்த நாட்டு மக்கள் நன்றாய் அறிவார்கள். ஆகவே அவரது பாராளுமன்ற பிரவேசத்திற்காக பிரசாரம் தேவையில்லை. அவர் பாராளுமன்றத்திற்கு வந்து நாட்டுக்காக பொறுப்புவாய்ந்த சில கடமைகளை எடுப்பதற்காக ஆரம்பத்திலிருந்தே கட்சியின் உள்ளுராட்சி, மாகாண மற்றும் அமைச்சர்கள்கூட கோரிக்கை விடுத்துவருகின்றார்கள். எனினும் அவர் இதுவரை விருப்பத்தை வெளியிடவில்லை. இப்போது அந்தக் கோரிக்கை பலமாக முன்வைக்கப்பட்டுள்ளது. இன்று உலகமும் வீழ்ச்சிகண்டுள்ள நிலையில் பசி ராஜபக்ஷவைப் போல ஒருவர் வந்து சிறந்த பணிகளை மேற்கொண்டால் நாட்டுக்கு பொருத்தமாக அமையும். பாராளுமன்றம் வருமாறு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன உட்பட பல தரப்பினரும் பசில் ராஜபக்ஷவிடம் கோரிக்கை விடுத்துள்ளனர். அக்கோரிக்கையை அவர் நிராகரிக்கவில்லை. எனவே, சாதகமான அறிவிப்பை விரைவில் விடுப்பார் என தெரிவித்தார்.

Tue, 06/29/2021 - 10:26


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை