இரசாயன பசளை தடை: புற்றுநோய், சிறுநீரக நோய்களிலிருந்து பாதுகாப்பு

விவசாய அமைச்சர் மஹிந்தானந்த அலுத்கமகே

இரசாயன பசளை தடை நடைமுறைப்படுத்தப்பட்டிருப்பதால் புற்றுநோய், சிறுநீரக நோய் போன்ற தாக்கங்களிலிருந்து நாட்டு மக்களை பாதுகாத்துக் கொள்ள முடியும் என விவசாய அமைச்சர் மஹிந்தானந்த அலுத்கமகே தெரிவித்தார்.

பல்லேகலையில் அண்மையில் இடம் பெற்ற கூட்டம் ஒன்றிலேயே அவர் இதனைத் தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,

இதுதொடர்பில் அவர் கருத்து தெரிவிக்கையில்,சர்வதேச மட்டத்தில் இரசாயன பசளை வர்த்தகம் உலகின் பாரிய வலையமைப்பைக் கொண்ட மாபியாவாக உள்ளது. இலங்கையில் மாத்திரம் வருடம் 100 பில்லியன் ரூபா கொடுக்கல் வாங்கல்கள் இடம்பெற்று வருகின்றன.

உலக வியாபார மாபியாக்கள் வரிசையில் போதைப் பொருள் மற்றும் மருந்துப் பொருட்கள் விற்பனை முதல் இரண்டாம் இடத்திலுள்ளன. அதற்கு அடுத்தபடியாக பசளை வர்த்தகம் உள்ளது. எனவே இரசாயன பசளை மாபியாவிற்கு எதிராக அரசு மேற்கொண்டு வரும் நடவடிக்கைகளை முன்னெடுக்க சகலரும் ஒத்துழைக்க வேண்டும்.

பசளை தட்டுப்பாடு குறித்து பல்வேறு வகையில் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்ட போதும் எந்த ஒரு விவசாயியோ அல்லது விவசாய அமைப்போ தமக்கு இயற்கைப் பசளை அல்லது சேதனப் பசளை கேட்டு ஆர்ப்பாட்டம் நடத்தவில்லை என்பதை நன்கு விளங்கிக் கொள்ள வேண்டும்.

அநுராதபுரம், திருகோணமலை கோமரங்கடவல பகுதிகளின் 100 சதவீத பசளைத் தேவை பூர்த்தி செய்யப்பட்டுள்ளது. யாழ் மாவட்டத்தில் 99 சதவீதமும் பொலனருவ மாவட்டத்தில் 92 சதவீதமும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

இதற்கு முன்னர் திறந்த சந்தையில் பசளை கொள்வனவு செய்யக்கூடியதாக இருந்தது. தற்போது அவை கமத்தொழில் மத்திய நிலையங்கள் ஊடாக வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இத்தகைய கட்டுப்பாடு காரணமாக சில குறைபாடுகள் ஏற்பட்டுள்ளன.

இயற்கைப்பசளை காரணமாக அடுத்த ஒரு போகத்திற்கு மட்டுமே விவசாயிகள் ஒரு சில பிரச்சினைகளுக்கு முகம் கொடுக்க வேண்டி வரும். ஆனால் அதனைத் தொடர்ந்து அது பாரிய வெற்றியாக மாறிவிடும்.

அதன் மூலம் பாரியளவு செலாவணியை மீதப்படுத்துவது மட்டுமல்ல நாட்டுமக்களை புற்றுநோய், சிறுநீரக நோய் போன்றவற்றில் இருந்து பாதுகாத்துக் கொள்ள முடியும்.

இலங்கை தேயிலை சர்வதேச ரீதியில் இன்று 4ஆம் இடத்திற்கு தள்ளப்படுள்ளது. அதற்கு காபன் பசளைப் பாவனைதான் காரணம் எனக் கூறுவது தவறாகும். ஏனெனில் இன்னும் தேயிலைத் தோட்டங்களுக்கு இரசாயனப் பசளையே வழங்கப்பட்டு வருவதாக அவர் தெரிவித்தார்.

(அக்குறணை குறூப் நிருபர்)

Tue, 06/15/2021 - 13:20


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை