தோட்ட தொழிலாளர்களது வேலை நாட்கள் குறைப்பு

பொருளாதார சிக்கல் என தொழிலாளர்கள் விசனம்

கொரோனா தொற்று பரவலால் பாதிக்கப்பட்டுள்ள இச்சந்தர்ப்பத்தில், தமது வேலை நாட்கள் குறைக்கப்படுவதால் பொருளாதார சிக்கலை எதிர்கொண்டுள்ளதாக பெருந்தோட்டத் தொழிலாளர்கள் தெரிவித்தனர். பல வருடங்களாக போராடியதன் விளைவாக 1,000 ரூபா நாளாந்த சம்பளம் நிர்ணயிக்கப்பட்டாலும் வேலை நாட்கள் குறைக்கப்பட்டுள்ளதாக தொழிலாளர்கள் குறிப்பிட்டனர்.

1,000 ரூபா சம்பளத்துக்கு 20 கிலோ கொழுந்தை பறிக்க தாம் நிர்பந்திக்கப்படுவதாக பொகவந்தலாவை தோட்ட மக்கள் தெரிவித்தனர்.

20 கிலோ கொழுந்தை பறிக்க முடியாத தற்போதைய சூழலில், வேலை நாட்கள் குறைக்கப்படுவதாகவும் தொழிலாளர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

கடந்த முதலாம் திகதி வேலை வழங்கப்பட்டதன் பின்னர், எதிர்வரும் 07 ஆம் திகதியே மீண்டும் வேலை வழங்கப்படுமென தோட்ட நிர்வாகம் அறிவித்துள்ளதாகவும் தோட்டத் தொழிலாளர்கள் சுட்டிக்காட்டினர்.

ஏப்ரல் , மே மாதங்களில் 07 தொடக்கம் 12 நாட்கள் மாத்திரமே இந்த மக்களுக்கான சம்பளம் கிடைத்துள்ளதுடன், இவர்களின் வாழ்வாதாரம் பெரும் கேள்விக் குறியாகியுள்ளது.

தொடரும் பயணக் கட்டுப்பாடு காரணமாக முற்கூட்டியே பொருட்களை கொள்வனவு செய்ய முடியாத நிலைக்கும் இந்த மக்கள் தள்ளப்பட்டுள்ளனர்.

சம்பள நிர்ணய சபையூடாக பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு 1,000 ரூபா சம்பளம் நிர்ணயிக்கப்பட்டு வழங்கப்பட்டாலும் இதன் உண்மையான பயனை பெற்றுக்கொள்ள முடியாதுள்ளதாக மக்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

 

Fri, 06/04/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை