வீணான அச்சம் கொள்ளாதிருக்க பொதுமக்களிடம் கோரிக்கை

வதந்திகளை நம்ப வேண்டாம் என்கிறார் அமைச்சர் பந்துல

சந்தைகளில் உப்புக்கு தட்டுப்பாடு நிலவுவதாக பரப்பப்படும் வதந்திகளை நம்ப வேண்டாமென்று வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

அது உண்மைக்கு புறம்பான தகவலென குறிப்பிட்டுள்ள அவர், தேவைக்கு அதிகமாகவே உப்பு கையிருப்பிலுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். ஹம்பாந்தோட்டை, புத்தளம் உள்ளிட்ட உப்பு உற்பத்தி நிறுவனங்களில் போதியளவு உப்பு கையிருப்பிலுள்ளதாகவும் அதற்கிணங்க எதிர்வரும் 06 மாதங்களுக்கு போதுமான உப்பு கையிருப்பிலுள்ளதாகவும் அந்த நிறுவனங்கள் தெரிவித்துள்ளன. நேற்று கொழும்பில் நடைபெற்ற விசேட செய்தியாளர் மாநாட்டில் அது தொடர்பில் மேலும் தெரிவித்துள்ள வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன;

எந்த வகையிலும் உப்புக்குத் தட்டுப்பாடோ அல்லது விலை அதிகரிப்போ இடம்பெறவில்லை.

நாட்டில் உப்புக்கு தட்டுப்பாடு நிலவுவதாக பல்வேறு பிரதேசங்களிலுமிருந்து தகவல்கள் கிடைக்கின்றன. நாட்டிலுள்ள அனைத்து உப்பு உற்பத்தியாளர்களும் மேலதிகமான உப்பு கையிருப்பிலுள்ளதாக வர்த்தக அமைச்சுக்குத் தெரிவித்துள்ளனர்.

கொழும்பு துறைமுக பகுதியில் கப்பல் ஒன்று தீ அனர்த்தத்துக்குள்ளாகி அதன் இரசாயன பொருட்கள் கடலில் கலந்துள்ளதாக கூறப்படுவதுடன் அது உப்பு உற்பத்தி நடவடிக்கைகளுக்கு பாதிப்பாக உள்ளதாக வதந்திகள் பரப்பப்படுகிறது. இவ்வாறான சந்தர்ப்பத்தில் பெருமளவிலான மக்கள் அதிக உப்பை கொள்வனவு செய்யும் நிலை ஏற்பட்டுள்ளதால் சிக்கல்கள் தோன்றியுள்ளன. இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொண்டு சில வர்த்தகர்கள் உப்பை பதுக்கி வைப்பதில் முனைப்புடன் செயற்படுகின்றர். எவ்வாறாயினும் ச.தொ.ச விற்பனை நிலையங்களுக்கூடாக உப்பை குறைந்த விலையில் விற்பனை செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படும். மேற்படி கப்பலில் ஏற்பட்ட தீ அனர்த்தத்தின் மூலம் கடல்நீரில் நச்சுடனான இரசாயன பொருட்கள் கலந்துள்ளதாக கூறப்படும் நிலையில் உப்பு உற்பத்திக்கு அது எந்த வகையிலும் பாதிப்பு ஏற்படுத்தவில்லையென்றும் ஹம்பாந்தோட்டை இலங்கை உப்பு உற்பத்தி நிறுவனத்தின் தலைவர் நிசாந்த சந்தபரன தெரிவித்துள்ளார் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.(ஸ)

லோரன்ஸ் செல்வநாயகம்

Wed, 06/02/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை