தடுப்பூசி செயற்திட்டங்களுக்கு உதவ பிரித்தானியா இணக்கம்

- ஜனாதிபதியிடம் -பிரிட்டிஷ் உயர்ஸ்தானிகர் தெரிவிப்பு

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கும் பிரிட்டிஷ் உயர்ஸ்தானிகர் சாரா ஹல்டனுக்குமிடையில் நேற்றைய தினம் ஜனாதிபதி செயலகத்தில் விசேட சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.

இதன்போது கொரோனா வைரஸ் ஒழிப்பு தொடர்பில் இலங்கை அரசாங்கம் மேற்கொண்டுவரும் வேலைத்திட்டங்களுக்கு பிரிட்டிஷ் உயர்ஸ்தானிகர் தனது பாராட்டுக்களை தெரிவித்துக் கொண்டதுடன் கொரோனா வைரஸ் தடுப்பூசி செயற்திட்டங்களுக்கு வழங்கக்கூடிய ஒத்துழைப்பு தொடர்பாகவும் கருத்துக்களை பரிமாறினார்.

வர்த்தக பொருளாதாரத்தை கட்டியெழுப்புவது தொடர்பில் ஜனாதிபதி மேற்கொண்டுள்ள நடவடிக்கைகளுக்கு பிரிட்டிஷ் அரசாங்கத்தின் ஒத்துழைப்பை பெற்றுக்கொள்வது தொடர்பில் இந்த பேச்சுவார்த்தையின் போது கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

2030ஆம் ஆண்டுக்குள் நாட்டின் மின்சக்தி உற்பத்தியில் 80 வீதத்தை இயற்கை வாயு மூலம் பெற்றுக்கொள்வது தொடர்பில் அரசாங்கம் மேற்கொண்டுள்ள வேலைத்திட்டங்களுக்கு தேவையான தொழில்நுட்ப ஒத்துழைப்பு மற்றும் சூரிய சக்தி மின் திட்டம் மற்றும் களஞ்சியப்படுத்தல் செயற்திட்டங்களுக்கும் ஒத்துழைப்பினை வழங்குவதற்கு பிரிட்டிஷ் உயர்ஸ்தானிகர் இணக்கம் தெரிவித்துள்ளார்.

இயற்கை பசளை உபயோகம் மூலம் சுற்றாடலை பாதுகாப்பதற்கு ஜனாதிபதி மேற்கொண்டுள்ள தீர்மானத்தை உயர்ஸ்தானிகர் பாராட்டியுள்ளார். அதற்குத் தேவையான செயன்முறை மற்றும் ஏனைய ஒத்துழைப்பையும் வழங்குவது தொடர்பில் அவர் கவனம் செலுத்தியுள்ளார்.

எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பலின் தீ அனர்த்தத்தினாள் சுற்றுச்சூழலுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்பு தொடர்பில் மதிப்பீடுகளை மேற்கொள்வதற்கு பிரிட்டிஷ் அரசாங்கத்தின் தொழில்நுட்ப உதவியை பெற்றுக்கொடுக்க வேண்டும் என இதன்போது ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ கேட்டுக்கொண்டுள்ளார்.

அதேவேளை ஜெனிவா யோசனை தொடர்பில் கருத்துக்களை தெரிவித்த ஜனாதிபதி, காணி சிக்கல்களுக்கு தீர்வினை பெற்றுக் கொடுத்தல் உள்ளிட்ட விடயங்களில் அரசாங்கம் மேற்கொண்டுள்ள வேலைத்திட்டம் தொடர்பிலும் தெளிவுபடுத்தினார். மேற்படி சந்திப்பில் இலங்கையிலுள்ள பிரிட்டிஷ் உயர்ஸ்தானிகராலயத்தின் உயரதிகாரிகள், ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் லலித் வீரதுங்க, வெளிநாட்டலுவல்கள் அமைச்சின் செயலாளர் அட்மிரல் ஜயனாத் கொலம்பகே ஆகியோரும் கலந்து கொண்டுள்ளனர். (ஸ)

லோரன்ஸ் செல்வநாயகம்

Sat, 06/05/2021 - 09:37


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை