கொழும்பிலிருந்து இந்தியா சென்ற கப்பலில் எண்ணெய் கசிவு; இந்திய கடலோர காவல்படை அவதானிப்பு

கொழும்பு துறைமுகத்திலிருந்து புதன்கிழமை (16) இந்தியா நோக்கி புறப்பட்டுச்சென்ற போர்த்துக்கல் கொடியுடனான எம்.வீ.டெவோன் என்ற சரக்குக் கப்பலில் எண்ணெய் கசிவு ஏற்பட்டுள்ளதாக இந்திய கடலோர காவல்படை உறுதிப்படுத்தியுள்ளது.

இந்திய கடல் எல்லைக்கு உட்பட்ட கிழக்கு கடல் வலயத்தில் இந்த எண்ணெய் கசிவு ஏற்பட்டுள்ளதாக அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையிலிருந்து 250 கடல்மைல் தொலைவிலுள்ள கடற்பகுதியில், சுமார் 10 கிலோலீட்டர் (10 KL) எண்ணெய் கடலில் படிந்துள்ளதாக இந்திய கடலோர காவல் படை தெரிவிக்கின்றது.

இந்த கப்பல் கொழும்பு துறைமுகத்திலிருந்து இந்தியாவின் மேற்கு வங்க மாநிலத்திலுள்ள ஹல்தியா துறைமுகத்தை நோக்கி பயணித்துக்கொண்டிருக்கிறது.

இந்த கப்பலின் எரிபொருள் தாங்கியில் ஏற்பட்ட கசிவின் காரணமாக, அதிலிருந்த எரிபொருள் கடலில் படிந்துள்ளதாக இந்திய கடலோர காவல் படை மேலும் தெரிவித்துள்ளது.

எனினும், எம்.வீ. டெவொன் கப்பல் தடையின்றி பயண இலக்கை நோக்கி பயணத்தை தொடர்வதாகவும், நிலைமை தொடர்பில் பொறுப்பான அனைத்து தரப்பினருக்கு அறிவுறுத்தியுள்ளதாகவும் காவல்படை மேலும் தெரிவித்துள்ளது. இதேவேளை, இந்த எரிபொருள் கசிவு தொடர்பில் கொழும்பு சமுத்திர மீட்பு மற்றும் இணைப்பு மத்திய நிலையத்தினால் கடலோர காவல்படைக்கு அறிவிப்பட்டதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன. இந்த கப்பலில் 382 கொள்கலன்கள் (மொத்த நிறை 10, 795 டன்) ஏற்றிச்செல்லப்படுவதாகவும், வெவ்வேறு நாடுகளைச் சேர்ந்த பணிக்குழாம் உறுப்பினர்கள் 17 பேர் அடங்குகின்றனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Sat, 06/19/2021 - 11:28


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை