தொழிலாளர்களிடம் அடாவடியில் ஈடுபடும் பெருந்தோட்டக் கம்பனிகளுக்கெதிராக அரசு உரிய நடவடிக்கையெடுக்க வேண்டும்

தோட்டத் தொழிலாளர்களிடம் அடாவடியில் ஈடுபடும் பெருந்தோட்டக் கம்பனிகளுக்கெதிராக அரசாங்கம் உரிய நடவடிக்கையெடுக்க வேண்டுமென ஐக்கிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷ் பாராளுமன்றத்தில் கோரிக்கை விடுத்தார்.

பாராளுமன்றத்தில் நேற்று (22) நடைபெற்ற காணி அபிவிருத்திக் கூட்டுத்தாபன அபிவிருத்தி திருத்தச் சட்டம் மீதான விவாதத்தில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

பெருந்தோட்டங்களில் காணிகள் வழங்கப்பட்டு வீடுகள் அமைத்து அங்கு குடியேறியுள்ள பல்லாயிரக் கணக்கான மக்கள் காணி உறுதிப் பத்திரம் கிடைக்காதிருக்கின்றனர். 30 வருடங்களுக்கு மேலாகவும் கடனில் வீடுகளை பெற்றவர்களும் இவ்வாறு உறுதிகள் கிடைக்காதிருக்கின்றனர்.

இந்நிலையில் கடந்த அரசாங்கத்தில் அமைச்சரவையின் அங்கீகாரத்துடன் பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சினூடாக அந்த உறுதிப்பத்திரங்கள் தயாரிக்கப்பட்டு ஆயத்தமாக வைக்கப்பட்டிருந்தன அவற்றை அவர்களுக்கு வழங்க நடவடிக்கையெடுக்க வேண்டுமென்று கேட்டுக்கொள்கின்றோம்.

அத்துடன் பெருந்தோட்டங்களில் தரிசு நிலங்களை இளைஞர்களுக்கு வழங்க வேண்டிய காலம் எழுந்துள்ளது என்று கூற வேண்டும். இது விவசாயத்தை ஊக்குவிக்கும், இனவாதமற்ற அரசாங்கமாக இருந்தால், இந்த நாட்டின் பொருளாதாரத்திற்கு உந்துச் சக்தியாக இருக்கின்றவர்களுக்கு அவற்றை வழங்க வேண்டும். இதேவேளை பெருந்தோட்டக் கம்பனிகள் மலையக மக்களை வஞ்சிக்கும் செயற்பாடுகளிலேயே ஈடுபட்டுள்ளன. தொழிலாளர்களுக்கு வேலைப்பழுவை அதிகரித்து, அந்த மக்களின் ஆயிரம் ரூபா சம்பள கொடுப்பனவின் பின்னர் வேலை நாட்களை குறைத்து முழுமையாக வஞ்சித்து கொவிட்19 நிலைமையிலும் கம்பனிகள் அடாவடித்தனமான செயற்பாடுகளில் ஈடுபடுகின்றனர். இந்த அரசாங்கம் இது தொடர்பில் நடவடிக்கையெடுக்க வேண்டும் என்றார்.

பாஹிம், சுப்பிரமணியம் நிஷாந்தன்


பாஹிம், சுப்பிரமணியம் நிஷாந்தன்
Wed, 06/23/2021 - 13:20


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை