இஸ்ரேலில் கூட்டணி அரசுக்கான எதிர்க்கட்சியின் முயற்சி தீவிரம்

இஸ்ரேலின் நீண்டகால பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் ஆட்சியை முடிவுக்குக் கொண்டுவரும் புதிய கூட்டணி அரசொன்றை நிர்ணயிக்கப்பட்ட காலக்கெடுவுக்குள் அமைக்கும் முயற்சியில் அரசியல்வாதிகள் தீவிரம் காட்டி வருகின்றனர்.

மதச்சார்பற்ற மையவாதியான இஸ்ரேல் எதிர்க்கட்சி தலைவர் யயிர் லபிட் மற்றும் மதச்சார்புடைய தேசியவாதியான நப்டாலி பென்னட் இருவரும் கடந்த திங்கட்கிழமை நள்ளிரவு வரை கூட்டணி அமைப்பது பற்றி நீண்ட பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

‘கூட்டணி பேச்சுவார்த்தைக் குழு இரவு முழுவதும் பேச்சுவார்த்தை நடத்திய நிலையில் ஐக்கிய அரசு ஒன்றை உருவாக்குவதில் முன்னேற்றம் கண்டுள்ளனர்’ என்று பென்னட்டின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார். இந்நிலையில் இரு தலைவர்களும் நேற்று நண்பகலில் மீண்டும் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர்.

இஸ்ரேலின் நீண்டகால பிரதமராக இருக்கும் நெதன்யாகு அவர் பதவியில் இருக்கும் நிலையில் ஊழல் விசாரணைக்கு முகம்கொடுத்திருக்கும் சூழலிலேயே இந்த பேச்சுவார்த்தை இடம்பெற்று வருகிறது. தன் மீதான குற்றச்சாட்டை நெதன்யாகு தொடர்ந்து மறுத்து வருகிறார். எனினும் புதிய கூட்டணி அரசொன்றை அமைப்பதற்கு எதிர்க்கட்சி தலைவருக்கு வழங்கப்பட்ட கெடு இன்று புதன்கிழமையுடன் முடிவுக்கு வரவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Wed, 06/02/2021 - 08:40


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை