ஈரானின் அடுத்த ஜனாதிபதியாக இப்ராஹிம் ரைசி

ஈரானின் அடுத்த ஜனாதிபதியாக இப்ராஹிம் ரைசி-Ebrahim Raisi Chief Justice of Iran Elected as Iran's Next President

- ஓகஸ்டில் நிறைவுக்கு வருகிறது ஹசன் ரூஹானியின் பதவிக் காலம்

ஈரானின் அடுத்த ஜனாதிபதியாக இப்ராஹிம் ரைசி தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

கடந்த 2019ஆம் ஆண்டு முதல் ஈரான் உச்ச நீதிமன்றத்தின் பிரதம நீதியரசராக இருந்து வரும் இப்ராஹிம் ரைசி, அரசியல் சார்ந்த அனுபவம் இல்லாதவர் என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போதைய ஈரான் ஜனாதிபதி ஹசன் ரூஹானியின் உச்சபட்சமான 4 ஆண்டுகளுடன் கூடிய தொடர்ச்சியான இரு பதவிக்காலம் முடிவடைந்ததை அடுத்து, புதிய ஜனாதிபதியை  தெரிவு செய்வதற்கான தேர்தல் நேற்று முன்தினம் (18) நடந்தது.

உள்ளூர் நேரப்படி காலை 7 மணிக்கு ஆரம்பமான வாக்குப்பதிவு நள்ளிரவு 2 மணி வரை தொடர்ந்தது. எனினும் ஜனாதிபதி தேர்தலில் மக்கள் மிகுந்த ஆர்வம் காட்டவில்லை என்றும் இதனால் குறைவான வாக்குகளே பதிவாகின என்றும் அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கடந்த 2017ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் 70‌ சதவீதத்துக்கும் அதிகமான வாக்குகள் பதிவான நிலையில், இம்முறை 60 சதவீதத்துக்கும் குறைவாகவே வாக்குகள் பதிவானதாக கூறப்படுகிறது.

ஆரம்பகட்ட வாக்கெண்ணும் பணியின் அடிப்படையில், எண்ணப்பட்ட 28.6 மில்லியன் வாக்குகளில் 17.8 மில்லியன் வாக்குகளை அவர் பெற்றுள்ளதாக, உள்நாட்டலுவல்கள் அமைச்சு அறிவித்துள்ளது.

ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட 40 பெண்கள் உள்ளிட்ட 592 பேர் பதிவு செய்திருந்த நிலையில், ஈரான் பாதுகாவலர் சபையினால் அப்பதவிக்கு போட்டியிட 7 ஆண்கள் தெரிவு செய்யப்பட்டிருந்தனர்.

ஈரானின் அடுத்த ஜனாதிபதியாக இப்ராஹிம் ரைசி-Ebrahim Raisi Chief Justice of Iran Elected as Iran's Next President

அந்நாட்டு உச்ச நீதிமன்றின் தலைமை நீதிபதி இப்ராஹிம் ரைசி, முன்னாள் இராணுவத் தளபதி மோசின் ரேசாய் (3.3 மில்லியன் வாக்குகள்), மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அப்துல் நாசர் ஹெம்மத்தி (2.4 மில்லியன் வாக்குகள்), முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அலி ரசா ஜகானி, தற்போதைய பாராளுமன்ற உறுப்பினர் அமீர் ஹுஸைன் காஷிஷடே ஹசேமி  ஆகிய ஏழு பேரே இவ்வாறு தெரிவு செய்யப்பட்டிருந்தனர்.

இந்நிலையில், வாக்குப்பதிவு முடிவடைந்ததும் உடனடியாக வாக்குகளை எண்ணும் பணிகள் ஆரம்பமானது. இதில் சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி இப்ராகிம் ரைசி சக வேட்பாளர்கள் 3 பேரையும் பின்னுக்கு தள்ளிவிட்டு வெற்றி பெற்றார்.

தேர்தல் முடிவுகள் குறித்து உத்தியோகபூர்வ அறிவிப்பு வெளியாகாத போதும், இப்ராஹிம் ரைசி வெற்றி பெற்றதாக அந்த நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டன.

ஜனாதிபதி வேட்பாளர்களாகபோட்டியிட்ட அப்தூல் நாசர் ஹெம்மாட்டி மற்றும் முகசன் ரஜாய் ஆகியோர் தங்களது தோல்வியை ஒப்புக் கொண்டதோடு, இப்ராஹிம் ரைசிக்கு தங்களின் வாழ்த்துகளையும் தெரிவித்தனர்.

ஈரான் நாட்டில் ஊழலுக்கு எதிராக குரல் கொடுக்கும் சமூக ஆர்வலர், 'ஏழைகளின் நாயகன்' என, 60 வயதான இப்ராஹிம் ரைசி புகழப்படுகிறார்.

பல ஆண்டு காலமாக ஈரான் அரசியல்வாதிகள் மற்றும் அதிகாரிகள் ஆகியோர் செய்த ஊழல்கள் குறித்து மக்களிடையே தனது பிரசாரத்தை மேற்கொண்டிருந்தார். ஊழல் செய்யும் உயரதிகாரிகள் யாராக இருந்தாலும் அவர்களது பெயர் மற்றும் விவரங்களை மக்கள் முன்னிலையில் கூறி, அவர்கள் எந்த வித ஊழலில் ஈடுபட்டார்கள் என்று வெளிப்படையாக மேடைகளில் பேசி மக்கள் மத்தியில் பிரபலம் அடைந்தவர் இப்ராஹிம் ரைசி. அந்த வகையில் மக்கள் மத்தியில் ஊழலை ஒழிக்கும் நாயகனாக இவர் கருதப்பட்டு வருகிறார்.

ஈரான் அரசியல் வட்டாரத்தில் இப்ராஹிம் உலகளவில் தெரிந்த முகமாக இல்லாத போதிலும் இவருக்கு மக்கள் செல்வாக்கு அதிகளவில் சேர்ந்துள்ளமையானது, தேர்தலில் இவருக்கு கிடைத்த 62 சதவீத வாக்குகளின் மூலம் புலனாகியுள்ளதாக அரசியல் ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.

இதனையடுத்து அவரை எதிர்த்து போட்டியிட்ட வேட்பாளர்கள் இப்ராஹிம் ரைசிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

மக்களின் தெரிவு தொடர்பில் தனது வாழ்த்துகளைத் தெரிவிப்பதாக, தற்போதைய ஜனாதிபதி ஹசன் ரூஹானி தெரிவித்துள்ளார்.

அமெரிக்கா உள்ளிட்ட மேலை நாடுகளில் எதிர்ப்பை சம்பாதித்து வரும் ஈரான் பொருளாதாரத்தை முன்னுக்குக் கொண்டுவர இப்ராஹிம் சிறந்த தலைவராக விளங்குவார் என்று அவரது ஆதரவாளர்கள் நம்பிக்கை வெளியிட்டுள்ளனர்.

Sun, 06/20/2021 - 12:40


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை