எரிபொருள் விலை உயர்வு சர்ச்சை; அமைச்சரவையில் முக்கிய தீர்மானம்

எரிபொருள் விலை உயர்வு சர்ச்சை; அமைச்சரவையில் முக்கிய தீர்மானம்-Fuel Price Increase-SLPP Condemned-Udaya Gammanpila

- அமைச்சரவை பதவி விலகக் கோரும் பொதுஜன பெரமுன
- அரசாங்கமே பொறுப்பு என்கிறார் எதிர்க்கட்சித் தலைவர்

எரிபொருட்களின் விலை உயர்வுக்கு விடயத்திற்கு பொறுப்பான அமைச்சர் இராஜினாமா செய்ய வேண்டுமென ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியின் செயலாளர் சட்டத்தரணி சாகர காரியவசம் எம்.பி. வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

நேற்று (11) முன்தினம் நள்ளிரவு முதல் எரிபொருட்களின் விலை பின்வருமாறு அதிகரிக்கப்பட்டிருந்தது.

பெட்ரோல்
- ஒக்டேன் 92 - ரூ. 20 இனால் - ரூ. 157
- ஒக்டேன் 95 - ரூ. 23 இனால் - ரூ. 184
டீசல்
- ஒட்டோ டீசல் - ரூ. 7 இனால் - ரூ. 111
- சுப்பர் டீசல் - ரூ. 12 இனால் - ரூ. 144
மண்ணெண்ணெய் -ரூ. 7 இனால் - ரூ. 77

ஆயினும், இவ்வாறான கொவிட் சூழ்நிலையில் நாட்டுமக்களின் அன்றாட நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டு, பொருளாதார நிலையில் பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்துள்ள நிலையில், இதற்கான முழு பொறுப்பையும் ஏற்றுக்கொண்டு, விடயத்திற்கு பொறுப்பான அமைச்சர் இராஜினாமா செய்ய வேண்டுமென, குறித்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, குறித்த விடயத்திற்கு பதிலளிக்கும் வகையில் இன்றையதினம் (13) ஊடகவியலாளர் சந்திப்பொன்றை, எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில ஒழுங்கு செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

கொரோனா நெருக்கடியால் பாதிக்கப்பட்டுள்ள மக்களை மற்றுமொரு கஷ்டத்திற்குள் தள்ளிவிடும் வகையிலான தீர்மானத்தை எடுத்துள்ளதன் மூலம், பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷ மற்றும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ ஆகியோர் தலைமையில் பாரிய மாற்றத்திற்கு நடுவில் ஏற்படுத்தப்பட்ட இவ்வரசாங்கத்தையும் எமது கட்சியையும் வேண்டுமென்று இவ்வாறு இழிவுபடுத்தும் செயல் ஏற்படுத்தப்பட்டுள்ளதா என சந்தேகம் எழுவதாக அதில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இதேவேளை, எரிபொருட்களின் விலை அதிகரிப்பு தொடர்பில் பல்வேறு தரப்பினராலும் முன்வைக்கப்பட்டுள்ள எதிர்ப்புகளைக் கருத்திற் கொண்டு, அது தொடர்பில் நாளை (14) இடம்பெறவுள்ள அமைச்சரவைக் கூட்டத்தில் பரிசீலிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அமைச்சரவை நாளை (14) பிற்பகல் 5.00 மணிக்கு இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Sun, 06/13/2021 - 13:26


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை