மக்களுக்கு பாதிப்பு ஏற்படாத முறையில் பணிகளை தொடருங்கள்

ஆளுநர்கள், அமைச்சர்களுக்கு ஜனாதிபதி அறிவுறுத்தல்

நாட்டில் பயணத்தடை நடைமுறையிலுள்ள போதும் மக்களின் இயல்பு வாழ்க்கை சீர்குலையாத வகையில் அத்தியாவசிய சேவைகளை முன்னெடுக்குமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மாகாண ஆளுநர்கள் மற்றும் மாவட்டச் செயலாளர்களுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

மேற்படி செயற்பாடுகளில் மாகாண ஆளுநர்கள் மற்றும் மாவட்டச் செயலாளர்களின் தனிப்பட்ட பங்களிப்பு அவசியமென்றும் அவர் தெரிவித்துள்ளார்.

தற்போதைய சூழ்நிலையில் நாட்டின் பொருளாதாரம் வீழ்ச்சியடைய இடமளிக்க முடியாது. அதற்கான சவாலை வெற்றி கொண்டு நாடு என்ற ரீதியில் முன்னோக்கிச் செல்வதற்கு அனைவரதும் பங்களிப்பு அவசியமென்றும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார். அந்த வகையில் தொழிற்சாலைகள் மற்றும் அபிவிருத்தி செயற்பாடுகளை தொடர்ந்தும் முன்னெடுத்துச் செல்வதற்கு அவசியமான பூரண ஒத்துழைப்பை வழங்குமாறும் ஜனாதிபதி ஆளுநர்கள் மற்றும் மாவட்டச் செயலாளர்களைக் கேட்டுக்கொண்டார். ஜனாதிபதி செயலகத்தில் நேற்றைய தினம் நடைபெற்ற மாகாண ஆளுநர்கள் மற்றும் மாவட்டச் செயலாளர்களுடனான சந்திப்பின் போதே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்துள்ளார்.

தொழிற்சாலை அல்லது அபிவிருத்தி திட்டங்களை மேற்கொள்ளும் பகுதிகளில் கொரோனா வைரஸ் தொற்று நோயாளி அடையாளம் காணப்படும்போது தொழிற்சாலையை அல்லது அபிவிருத்தித் திட்டத்தை முழுமையாக மூடி விடுவதற்கு பதிலாக சுகாதார வழிமுறைகளை பின்பற்றி தொடர்ச்சியாக அவற்றை முன்னெடுத்துச் செல்வதற்கான சூழலை உருவாக்க வேண்டியதன் அவசியத்தையும் ஜனாதிபதி இதன்போது வலியுறுத்தினார்.

நாட்டில் பயணத் தடை நடைமுறையிலுள்ள நிலையில் மக்களின் இயல்பு வாழ்க்கைக்கு ஏற்பட்டுள்ள சவால்கள் மற்றும் நெருக்கடிகள் தொடர்பில் இதன்போது முக்கிய கவனம் செலுத்தப்பட்டது.

சுகாதார வழிமுறைகளைப் பின்பற்றி தொழிற்சாலைகள் மற்றும் அத்தியாவசிய சேவைகளை முன்னெடுத்துச் செல்வதற்கு அரசாங்கம் ஆலோசனை வழங்கியுள்ள நிலையில் பிரதேச ரீதியில் அந்த வேலைத்திட்டங்களை முன்னெடுப்பதில் குறைபாடுகள் நிலவுவதாக தமக்கு முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக ஜனாதிபதி இதன்போது தெரிவித்துள்ளார். பிரதேச மட்டத்தில் விவசாயிகளின் மரக்கறிகள் மற்றும் பழ வகைகள் மேலதிகமாக காணப்படுகின்ற போதும் அவற்றை விலைக்கு கொள்வனவு செய்து விநியோகிப்பதற்கான பொறிமுறையொன்றை முறையாக முன்னெடுக்குமாறும் இதன்போது ஜனாதிபதி ஆலோசனை வழங்கினார்.

அந்த வகையில் விவசாய பொருளாதாரம் வீழ்ச்சியடைய இடமளிக்க முடியாதென்றும் சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பினருக்கும் அதற்கான பொறுப்பு உண்டு என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

தேசிய நிதி மற்றும் வெளிநாட்டு கடன் உதவியுடன் நடைமுறைப்படுத்தப்படும் திட்டங்கள் உரிய காலத்தில் உரிய இலக்கை அடைவது அவசியமாகும்.அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட்டு வரும் 10,000 குளங்களை புனரமைக்கும் திட்டம், ஒரு இலட்சம் கிலோமீட்டர் வீதிகளை அபிவிருத்தி செய்யும் திட்டம், 1,000 தேசிய பாடசாலைகள் திட்டம், வீடமைப்பு, பிரதேச வைத்திய சாலைகள் புனரமைப்பு, குடிநீர் திட்டம், மின் உற்பத்தி திட்டம் ஆகிய திட்டங்களை தொடர்ச்சியாக முன்னெடுத்துச் செல்வதற்கு இராஜாங்க அமைச்சர்கள் மற்றும் அந்த அமைச்சுக்களின் செயலாளர்களோடு நேரடி தொடர்புகளை ஏற்படுத்தி செயற்படுமாறு இதன்போது ஜனாதிபதி மாகாண ஆளுநர்கள் மற்றும் மாவட்ட செயலாளர்களுக்கு பணிப்புரை வழங்கினார்.

லோரன்ஸ் செல்வநாயகம்

Thu, 06/03/2021 - 07:40


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை