சுகாதார நடைமுறைகளுக்கேற்ப மருதமடு அன்னையின் ஆடி மாத பெருவிழா

இலங்கையில் கொரோனா தொற்று நோயின் இக்கட்டான சூழ்நிலையிலும் சுகாதார நடைமுறைகளுக்கேற்ப மன்னார் மறைமாவட்டத்தின் மருதமடு அன்னையின் ஆடி மாத பெருவிழா கொண்டாடப்பட இருக்கின்றது.

வெளி மாவட்டத்தவர்கள் கலந்துகொள்வது தவிர்க்கப்பட்டுள்ளது.

திருவிழா திருப்பலியைத் தொடர்ந்து மன்னார் மறைமாவட்ட மறைக்கோட்டங்களுக்கு தலா இரண்டு திருப்பலிகள் வீதம் நடாத்தி குறிப்பிட்ட தொகையினர் கலந்துகொள்ள ஒத்துழைப்பு வழங்கப்பட்டுள்ளது.

இதற்கு ஒத்துழைப்பு நல்கிய யாவருக்கும் நன்றி தெரிவிப்பதாக மன்னார் மறைமாவட்ட ஆயர் இம்மானுவேல் பெனாண்டோ ஆண்டகை தெரிவித்தார்.

கடந்த புதன்கிழமை மன்னார் மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் மன்னார் அரசாங்க அதிபர் திருமதி அ. ஸ்ரான்லி டீமெல் தலைமையில் ஆடி மாத மருதமடு அன்னை பெருவிழாவுக்கான ஏற்பாடு கூட்டம் நடைபெற்றது.

இதன்போது மன்னார் ஆயர் இம்மானுவேல் பெனாண்டோ ஆண்டகை மேலும் தெரிவிக்கையில்,

கடந்த கூட்டத்தில் கலந்தாலோசித்தபோது பல திருப்பலிகள் ஒப்புக்கொடுக்க முடியும் எனவும் ஆனால் ஒரு திருப்பலியில் ஆகக்கூடியது முப்பது பேர் மட்டுமே கலந்துகொள்ள முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இத் திருப்பலிகளை ஆலயத்தின் முன்றலிலேயே வைப்பது எனவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. திருவிழா திருப்பலி ஆடி மாதம் 02ந் திகதி காலை 6.15 க்கு நடைபெறும். இத் திருப்பலி தமிழ், சிங்களம் மற்றும் லத்தீன் மொழியிலும் வழமைபோன்று இடம்பெறும். அத்துடன் திருச்சுரூப ஆசீரும் வழங்கப்படும்.

இதைத் தொடர்ந்து ஆறு திருப்பலிகள் இடம்பெறும். மன்னார் மறைமாவட்டத்திலுள்ள ஒவ்வொரு மறைகோட்டங்களிலிருந்தும் முப்பது பேர்கள் கலந்துகொள்ளும் விதமாக அவர்களுக்கென தனித்தனி திருப்பலிகள் ஒப்புக்கொடுக்கப்படும்.

தலைமன்னார் விஷேட நிருபர்

Fri, 06/18/2021 - 16:26


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை