அடுத்தகட்ட நகர்வுகளை தவிர்க்க இலங்கை கோரிக்கை

இலங்கை தூதரகம் உத்தியோகபூர்வமாக அறிவிப்பு

இலங்கை தொடர்பில் அமெரிக்க காங்கிரஸ் பிரதிநிதியான டெபோரா கே.ரோஸினால் அமெரிக்க பிரதிநிதிகள் சபையில் முன்வைக்கப்பட்ட தீர்மானம் தொடர்பில் அடுத்த கட்ட நகர்வுகள் எதனையும் மேற்கொள்ள வேண்டாமென அமெரிக்காவிடம் இலங்கை உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.

முள்ளிவாய்க்கால் இனப்படுகொலைகளின் 12 வருட பூர்த்தியையொட்டி அமெரிக்க காங்கிரஸ் கட்சியின் பிரதிநிதியான டெபோரா கே.ரோஸினால் மேலும் சில பிரதிநிதிகளுடன் இணைந்து ‘பொறுப்புக் கூறலை நிலைநாட்டும் நோக்கிலான  செயற்திறன்மிக்க சர்வதேசப் பொறிமுறை’ மற்றும் ‘இலங்கையில் நிரந்தர அரசியல் தீர்வு’ ஆகிய தலைப்புக்களில் கடந்த மேமாதம் 18 ஆம் திகதி அமெரிக்க பிரதிநிதிகள் சபையில் தீர்மானமொன்று முன்வைக்கப்பட்டது.

இத்தீர்மானம் தொடர்பான தமது நிலைப்பாட்டை கடந்த புதன்கிழமை வெளிப்படுத்திய இலங்கை வெளிவிவகார அமைச்சு, இந்தத் தீர்மானம் ஒருதலைப் பட்சமானதும் அபாண்டமான பொய்க் குற்றச்சாட்டுக்களை உள்ளடக்கியதாகவும் அமைந்துள்ளதென்று குறிப்பிட்டிருந்தது.

அதுமாத்திரமன்றி இத் தீர்மானம் வெறுமனே உரிமை சார்ந்த தீர்மானம் அல்ல எனவும், தமிழீழ விடுதலைப்புலிகளின் பிரிவினைவாத நிகழ்ச்சி நிரலை முன்னெடுத்துச் செல்வதற்காக அமெரிக்க காங்கிரஸிலுள்ள ஒத்த கருத்துடைய தமிழீழ விடுதலைப் புலிகளின் அனுதாபிகளின் தலையீட்டினால் கொண்டுவரப்பட்ட தீர்மானமென்றும் வெளிவிவகார அமைச்சு சாடியிருந்தது.இந்நிலையில் தற்போது டெபோரா கே.ரோஸினால் முன்வைக்கப்பட்ட தீர்மானம் தொடர்பில் அடுத்தகட்ட நகர்வுகள் எதனையும் மேற்கொள்ளவேண்டாமென்று அமெரிக்க வெளிவிவகாரங்களுக்குப் பொறுப்பான ஆணைக்குழுவுக்கு அமெரிக்காவிலுள்ள இலங்கைத்தூதரகம் நேற்று (04) அறிவித்திருக்கிறது.

லோரன்ஸ் செல்வநாயகம்

Sat, 06/05/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை