கொரோனா வைரஸ் தொற்று: தொற்றாளர்களும் மரணங்களும் இந்தியாவை விஞ்சி விட்டது

அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் எச்சரிக்கை

நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றினால் மரணிப்பவர்களின் எண்ணிக்கை விகிதத்தை நோக்கும்போது இலங்கை இந்தியாவை விஞ்சி விட்டதாகவும் அந்த வகையில் இலங்கை மிக மோசமான நிலைமையை நோக்கி பயணிப்பதாகவும் அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் உபதலைவர் விஷேட மருத்துவர் நவீன் சொய்சா தெரிவித்துள்ளார்.

நாட்டில் பயணத் தடை நடைமுறையில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டாலும் வீதிகளின் நிலைமையை பார்க்கும்போது அவ்வாறு தெரியவில்லை என குறிப்பிட்ட அவர் பயணத் தடையை ஒவ்வொரு தடவையும் மீறும் போதும் நமக்கு நெருக்கமான மனித உயிர் ஒன்றை நாம் இழக்கின்றோம் என்பதை நாட்டு மக்கள் அனைவரும் மனதில் கொள்ள வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் அவர் அது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்:

இந்தியாவில் 2 மில்லியன் வைரஸ் தொற்று நோயாளர்களுக்கு 2 .01 வீதமானோர் மரணமடையும் நிலையில் இலங்கையில் ஒரு மில்லியன் நோயாளர்களில் 1.91 வீதமாக மரணிப்போர் தொகை உள்ளதாகவும் மாவட்ட ரீதியில் இடம்பெறும் மரணங்களை கணக்கிடும்போது அது மேலும் அதிகமாக உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

காலி மாவட்டத்தில் அந்த வீதம் மில்லியனுக்கு 7.01 விதமாகவும் கண்டியில் அது 4.49 விதமாகவும் கொழும்பில் அது 2.43 விதமாகவும் கம்பஹாவில் 2.46 விதமாகவும் களுத்துறையில் அது 3.34 வீதமாகவும் காணப்படுவதாக அறிக்கைகள் மூலம் தெரிய வருகிறது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதே போன்று இந்தியாவில் தொற்றாளர்களின் எண்ணிக்கை மில்லியனுக்கு 80.03 என உள்ளபோது இலங்கையில் அது 136.68 ஆக உள்ளதாகவும் அதை நோக்கும்போது இந்தியாவை விட ஒன்றரை மடங்கு இலங்கையில் தொற்றாளர் எண்ணிக்கை அதிகரிப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

லோரன்ஸ் செல்வநாயகம்

Sat, 06/12/2021 - 11:28


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை