தேசிய சிறுநீரகவியல் விசேட வைத்தியசாலை அங்குரார்ப்பணம்

ஜனாதிபதியினால் நேற்று பொதுமக்களிடம் கையளிப்பு

பொலன்னறுவையில் நிர்மாணிக்கப்பட்டுள்ள சீன - இலங்கை நட்புறவு தேசிய சிறுநீரகவியல் விசேட வைத்தியசாலை, நேற்று (11) ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷவினால் பொதுமக்களிடம் கையளிக்கப்பட்டது.

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, 2015ஆம் ஆண்டில் சீனாவுக்கு மேற்கொண்டிருந்த விஜயத்தின்போது முன்வைத்த கோரிக்கையின் பேரில், சீன அரசாங்கத்தின் முழுமையான அன்பளிப்பாக இந்த வைத்தியசாலைக் கட்டடத்தொகுதி நிர்மாணிக்கப்பட்டுள்ளது.

இந்நிகழ்வின்போது, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ, நினைவுப் பலகையைத் திரைநீக்கம் செய்து, வைத்தியசாலைக் கட்டடத் தொகுதியைத் திறந்து வைத்தார்.

வைத்தியசாலையின் பணிகள் குறித்து, பொலன்னறுவை பொது வைத்தியசாலையின் பணிப்பாளர் விசேட வைத்திய நிபுணர் என்.கே.சம்பத் இந்திக்க குமார விபரித்தார். வைத்தியசாலையின்  குருதி சுத்திகரிப்புப் பிரிவு, சத்திர சிகிச்சை நிலையம், தீவிர சிகிச்சைப் பிரிவு உள்ளிட்ட வைத்தியசாலை கட்டிடத் தொகுதியை, ஜனாதிபதி உள்ளிட்ட அதிதிகள் பார்வையிட்டனர். முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாரச்சி, வடமத்திய மாகாண ஆளுநர் மஹிபால ஹேரத், இராஜாங்க அமைச்சர்களான சுதர்ஷனி பெர்ணான்டோபுள்ளே, சன்ன ஜயசுமன, ரொஷான் ரணசிங்க, சிறிபால கம்லத், பாராளுமன்ற உறுப்பினர்களான அமரகீர்த்தி அத்துகோரல, சுரேன் ராகவன், சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அசேல குணவர்தன, இலங்கைக்கான சீனத் தூதுவர் செங் ஹொங் உள்ளிட்டோர் இந்நிகழ்வில் கலந்துகொண்டிருந்தனர்.

 

Sat, 06/12/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை