திருக்கோவில் பிரதேசத்தில் இரண்டாவது நாளாகவும் வீதி சோதனைகள் முன்னெடுப்பு

பிரதேச செயலாளர், சுகாதார அதிகாரிகள், இராணுவத்தினர் கூட்டாக களத்தில்

அம்பாறை திருக்கோவில் பிரதேசத்தில் அரசின் பயணக்கட்டுப்பாட்டு விதிமுறைகளை இறுக்கமாக நடைமுறைப்படுத்தி பிரதேச மக்களை கொவிட் தொற்றில் இருந்து பாதுகாக்கும் நோக்கில் திருக்கோவில் பிரதேசத்தில் பிரதேச செயலாளர், சுகாதார வைத்திய அதிகாரிகள், பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் கூட்டாக இணைந்து அதிரடி வீதி சோதனைகளை செவ்வாய்க்கிழமை (15) முன்னெடுத்திருந்தனர்.

இவ் வீதிச் சோதனைகள் திருக்கோவில் பிரதேச செயலாளர் ரீ.கஜேந்திரன் மற்றும் திருக்கோவில் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி சீ.ஜ.பி.கே.திலகரெத்தின ஆகியோரின் ஆலோசனைக்கு அமைய செவ்வாய்க்கிழமை இரண்டாம் நாளாகவும் பாரிய வீதி சோதனை நடவடிக்கைகள் இடம்பெற்றிருந்தன.

இதன்போது பிரதான வீதிகளில் பயணம் செய்த வாகனங்கள் மற்றும் பொது மக்கள் ஆகியோரது பயண அனுமதி பத்திரங்கள் பரிசோதிக்கப்பட்டு, அனுமதி பத்திரங்களை முறையாக பெற்று பயணிக்காத நபர்களுக்கு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டு எச்சரிக்கை செய்து திருப்பி அனுப்பி வைக்கப்பட்டனர்.

திருக்கோவில் பிரதேசத்தில் கொவிட் 19 தொற்றினை தடுத்து பிரதேச மக்களை நோய் தாக்கத்தில் இருந்து பாதுகாக்கும் நோக்கில் தொடர்ந்தும் இவ்வாறான வீதி சோதனைகள் முன்னெடுக்கப்படவுள்ளதுடன், கல்முனை பிராந்திய கொவிட் தொற்று நிலையில் தற்போது திருக்கோவில் பிரதேசம் 17வது இடத்தில் இருப்பதுடன் தொடர்ந்தும் திருக்கோவில் பிரதேசத்தினை கொவிட் தொற்று ஏற்படாது பாதுகாப்பதற்கு பிரதேச மக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் எனவும் தெரிவித்தார்.இவ் வீதிச் சோதனையில் திருக்கோவில் பிரதேச செயலாளர் ரீ.கஜேந்திரன், பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் பி.மோகனகாந்தன்,பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பி.கே.திலகரெத்தின, பிரதேச செயலக கொவிட் 19 தடுப்பு செயலணிக் குழு உத்தியோகத்தர்கள் ஆகியோரும் மேற்படி வீதிச் சோதனைகனைகளை முன்னெடுத்து இருந்தனர்.

(திருக்கோவில் தினகரன் நிருபர்)

Thu, 06/17/2021 - 13:20


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை