தைக்கா சுஜப் ஆலிமின் மறைவுக்கு சர்வமத தலைவர்கள் அனுதாபம்

இலங்கையில் இனங்களுக்கிடையில் நல்லுறவை மேம்படுத்துவதற்காக மகத்தான பணிகளை ஆற்றியுள்ள அப்ஃழழுல் உலமா கலாநிதி காலஞ்சென்ற அஷ் ஷெய்ஹ் தைக்கா சுஐப் ஆலிம் (ரலி) அவர்கள் ​போன்று மேலும் பல ஆன்மீகத் தலைவர்கள் உருவாக வேண்டும் என்று புத்த சாசன, மத மற்றும் கலாசார விவகாரங்களுக்கான அமைச்சரான பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷவின் நான்கு மதங்களதும் சமய, கலாசார விவகாரங்களுக்கு பொறுப்பான இணைப்பாளர்கள் விடுத்துள்ள அனுதாபச் செய்தியில் குறிப்பிட்டுள்ளனர்.

புகழ்பெற்ற இஸ்லாமிய அறிஞரும், ஆய்வாளரும், பன்னூலாசிரியரும், பன்மொழித்துறை நிபுணரும், ஆன்மீகத் தலைவருமான கலாநிதி தைக்கா சுஐப் ஆலிம் அவர்களின் மறைவையொட்டி விடுத்துள்ள அனுதாபச் செய்தியிலேயே அவர்கள் இவ்வாறு குறிப்பிட்டுள்ளனர்.

புத்த சாசன, மத மற்றும் கலாசார விவகாரங்களுக்கான அமைச்சரும் பிரதமருமான மஹிந்த ராஜபக்‌ஷவின் புத்தசாசன, மத மற்றும் கலாசார விவகாரங்களுக்கு பொறுப்பான இணைப்பாளர் வண. கலாநிதி அங்ரஹரே கஸ்ஸப நாயக்க தேரர், இந்து சமய மற்றும் கலாசார விவகாரங்களுக்கு பொறுப்பான இணைப்பாளர் கலாநிதி பாபு சர்மா குருக்கள், முஸ்லிம் சமய மற்றும் கலாசார விவகாரங்களுக்கு பொறுப்பான இணைப்பாளர் அஸ் ஸெய்யத் கலாநிதி ஹஸன் மௌலானா அல் காதிரி, கிறிஸ்தவ சமய விவகாரங்களுக்கு பொறுப்பான இணைப்பாளர் அருட் தந்தை கலாநிதி சிக்ஸ்டன்ஸ் குருகுலசூரிய ஆகியோர் இணைந்தே இந்த கூட்டு அனுதாப அறிக்கையை விடுத்துள்ளனர்.

அந்த அறிக்கையில் அவர்கள் மேலும் குறிப்பிட்டிருப்பதாவது, மறைந்த தைக்கா சுஐப் ஆலிம் (ரலி) அவர்கள் ஆன்மீகத் துறைக்கு அளப்பரிய பங்களிப்பை நல்கியுள்ளார். அவரைப் போன்ற ஆன்மீகத் தலைவர்கள் மென்மேலும் உருவாக வேண்டும். அவர் ஏனைய ஆன்மீகத் தலைவர்களுக்கும் நல்ல முன்னுதாரணமாகும்.

பாரம்பரிய முஸ்லிம்களின் பரம்பரையில் வந்துதித்த சுஐப் ஆலிம் (ரலி) அவர்கள், இந்நாட்டுக்கு பல் துறைகளிலும் அளப்பரிய சேவையாற்றியுள்ளார்கள். அந்த வகையில் இன, மதங்களுக்கிடையில் நல்லுறவை மேம்படுத்துவதற்காக அவர்கள் மேற்கொண்ட சேவைகள் என்றும் அழியாத்தடம் பதித்துள்ளன.

மறைந்த சுஐப் ஆலிம் (ரலி) அவர்கள் எவ்வாறு தமது பாட்டாரின் சேவையை முன்னெடுத்தார்களோ அதேபோன்று அவரது வாரிசுகளும் அவரது சேவைகளை முனனெடுக்க முன் வர ​வேண்டும். இவர் முழு உலகிற்குமே முன்மாதிரியாவார். இவ்வாறு அளப்பரிய சேவையாற்றியுள்ள மகானையே உலகம் இழந்துள்ளது. இவ்வாறான பொக்கிஷங்கள் இன்னும் இன்னும் உருவாக வேண்டும் என்று இச்சமயம் நாம் இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்' என்றும் குறிப்பிட்டுள்ளனர்.

Fri, 06/18/2021 - 15:24


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை