சுபீட்சத்தின் நோக்கு திட்டத்தை நடைமுறைப்படுத்த பசிலின் ஒத்துழைப்பு மிக அவசியம்

இராஜாங்க அமைச்சர் நிமல் லன்சா

சுபீட்சத்தின் நோக்கு கொள்கைத் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதில் ஜனாதிபதி, பிரதமர் ஆகியோரோடு பசில் ராஜபக்ஷவின் ஒத்துழைப்பும் மிக முக்கியமானதாகும் என தெரிவித்த இராஜாங்க அமைச்சர் நிமல் லன்சா, பொருளாதார மறுசீரமைப்பு மற்றும் வறுமை ஒழிப்புக்கான ஜனாதிபதி செயலணியின் தலைவர் முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷ, பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்துவது காலத்தின் தேவையாகுமெனவும் தெரிவித்துள்ளார்.

முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷவின் பாராளுமன்ற பிரதிநிதித்துவம் தொடர்பில் தற்போது பரவலாக பேசப்பட்டு வருவதையடுத்து ஊடகவியலாளர்கள் எழுப்பிய

கேள்விக்கு பதிலளிக்கையிலேயே இராஜாங்க அமைச்சர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அது தொடர்பில் அவர் மேம் தெரிவிக்கையில்;

தற்போதைய பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, ஜனாதிபதியாக பதவி வகித்த காலத்தில் பொருளாதார முகாமைத்துவம் நாட்டின் அபிவிருத்தி தொடர்பில் முக்கியமான பங்களிப்பை பசில் ராஜபக்ஷ வழங்கியிருந்தார்.

தெற்காசியாவிலேயே அபிவிருத்தி மற்றும் பொருளாதார ரீதியில் இலங்கையை முன்னேற்றுவதற்காக அவர் சிறந்த நடவடிக்கைகளை முன்னெடுத்தார்.

வடக்கின் வசந்தம், கிழக்கின் உதயம் உட்பட கிராமிய பொருளாதாரத்தைக் கட்டியெழுப்பும் பல்வேறு வேலைத்திட்டங்களை அவர் வெற்றிகரமாக முன்னெடுத்தார்.

தற்போது கொரோனா வைரஸ் சூழலில் இலங்கை மட்டுமன்றி உலகளாவிய பொருளாதாரம் அழுத்தங்களுக்கு உட்பட்டுள்ள இச் சந்தர்ப்பத்தில் எரிபொருள் விலை அதிகரிப்பினால் பல்வேறு துறைகளிலும் சிக்கல்கள் ஏற்பட்டுள்ளன. அதற்காக மக்களுக்கு நிவாரணம் பெற்றுக் கொடுக்கப்பட வேண்டுமென்ற நோக்கத்தை பொதுஜன பெரமுன கொண்டுள்ளது. அதுதொடர்பான காத்திரமான செயற்பாடு ஒன்றுக்காக பசில் ராஜபக்ஷ, ஜனாதிபதி மற்றும் பிரதமர் உள்ளிட்ட அமைச்சரவை உரிய பேச்சுவார்த்தை நடத்தி நடவடிக்கைகளை முன்னெடுக்கும்.

அந்த வகையில் அவர் பாராளுமன்றத்திற்கு வெளியில் இருப்பதைவிட பாராளுமன்ற அங்கத்துவத்தை பெற்று அமைச்சர் பதவியை வகிப்பது காலத்தின் தேவையாகுமென்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். (ஸ)

லோரன்ஸ் செல்வநாயகம்

Tue, 06/29/2021 - 14:22


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை