கொவிஷீல்டுக்கு பதிலாக பைஸர் சாத்தியப்படுமா?

சுகாதார தரப்பை ஆராய அமைச்சர் கோரல்

அஸ்ட்ரா செனெகா (கொவிஷீல்ட்) முதலாவது தடுப்பூசியை பெற்றுக்கொண்டவர்களுக்கு, இரண்டாவதாக பைஸர் தடுப்பூசியை வழங்கக்கூடிய சாத்தியம் தொடர்பில் அறிவிக்குமாறு சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்திடம், இராஜாங்க அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமன கோரியுள்ளார்.

அஸ்ட்ரா செனெகா முதல் தடுப்பூசியை பெற்றுக்கொண்ட வர்களுக்கு, இரண்டாவதாக பைஸர் தடுப்பூசியை செலுத்துவது பாதுகாப்பானதென ஆய்வில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக உலக சுகாதார ஸ்தாபனத்தின் நோயெதிர்ப்பு தொடர்பான நிபுணர் குழு தெரிவித்திருந்தது. அதன் அடிப்படையில் இராஜாங்க அமைச்சர் இந்த கோரிக்கையை முன்வைத்துள்ளார்.

நாட்டில் இதுவரையில் 9,25, 242 பேருக்கு கொவிஷீல்ட் முதல் தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளது. அவர்களில் 3,55, 412 பேருக்கு நேற்று முன்தினம் வரை கொவிஷீல்ட் இரண்டாவது தடுப்பூசியும் வழங்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் கொவிஷீல்ட் தடுப்பூசி ஏற்றுமதி இடைநிறுத்தப்பட்டதையடுத்து இலங்கை உள்ளிட்ட நாடுகளில் கொவிஷீல்டுக்கான பற்றாக்குறை நிலவிவருகிறது.

லோரன்ஸ் செல்வநாயகம

Wed, 06/16/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை