இணையவழிக் கல்விக்காக மலையேறும் தெஹியோவிட்ட பாடசாலை மாணவர்கள்

கொரோனா வைரஸ் காரணமாக நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலையில் மாணவர்களின் கல்வி நடவடிக்கைகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன. பாடசாலைகள் காலவரையறையின்றி மூடப்பட்டுள்ளமையால் மாணவர்களின் கல்வி நடவடிக்கைகள் அதிகளவில் இணையவழி ஊடாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

ஒருபக்கம் அரசாங்கம் மாணவர்களுக்கு வளவாளர்களைக் கொண்டு தொலைக்காட்சி ஊடாக பாடங்களை நடாத்துகின்றது. இன்னும் ஒருபக்கம் சில ஆசிரியர்கள் தன்னார்வ செயற்பாடுகளினாலும் மாகாண வலயக்கல்வி காரியாலயங்களின் பணிப்புரை, பாடசாலை அதிபர்களின் வேண்டுதலின் அடிப்படையிலும் வட்ஸ்அப் மற்றும் Zoom தொழில்நுட்பத்தின் ஊடாக கற்பித்தலை தொடர்ந்து வருகின்றனர்.

முன்பள்ளி முதல் உயர்தரம் வரை அனைத்து கற்பித்தல் நடவடிக்கைகளும் இணையவழி ஊடாகவும் நடைபெறுகின்றன. எனினும்

இந்த இணையவழி கல்வி நடவடிக்கைகள் காரணமாக மாணவர்களும் பெற்றோர்களுக்கும் பெரும் சிரமங்களையும் மனஉளைச்சல்களுக்கும் உள்ளாகுகின்றனர். இணைய வழி வகுப்புகளுக்கு அண்ணளவாக 50வீதமான மாணவர்களே பங்குகொள்கின்றனர்.

பெரும்பாலான மாணவர்களின் வீடுகளில் கணணி மற்றும் கையடக்க ஸ்மார்ட் தொலைபேசி, வலையமைப்பு வசதிகள், இல்லாத ஒரு நிலை காணப்படுகின்றது. அதுவும் மலையகத்தில் மிகவும் பின்தாங்கிய பிரதேசங்களில் வாழும் மாணவர்கள் கணணி மற்றும் கையடக்க ஸ்மார்ட் தொலைபேசி,வலையமைப்பு வசதிகள், இன்மையால் இணையவழி மூலம் தமது கல்வி நடவடிக்கைகளை தொடமுடியாத நிலையில் உள்ளனர்.

அந்தவகையில் கேகாலை மாவட்டத்தில் தெஹியோவிட்ட பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட முருத்தெட்டுவ, யோகம உட்பட ஆறு கிராமங்களை சேர்ந்தவர்களுக்கு இணைய வசதியை பெற்றுக்கொள்ளக்கூடிய வலையமைப்பு வசதிகள் இன்மையால் மாணவர்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர்.

தமது பாடசாலைகளில் நடாத்தப்படும் இணைய வகுப்புகளுக்கு பங்குகொள்வதற்காக அம்மாணவர்கள் வலையமைப்பை பெற்றுக்கொள்ளும் முகமாக தமது இருப்பிடத்தில் இருந்து உயர்ந்த இறப்பர் மலைப்பிரதேசங்களுக்கு சென்று இணைய வழியில் கல்வியை தொடர்கின்றனர். இதற்காக இவர்கள் காட்டுவழியின் ஊடாகவே பயணிக்கவேண்டும். தற்பொழுது தொடர்ந்து மழை பெய்துவருவதால் மலை உச்சியில் கூடாரம் அமைத்து கல்விக் கற்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இதன் காரணமாக மாணவர்களும் பெற்றோர்களும் பல பிரச்சினைகளுக்கு முகங்கொடுப்பதாக தெரிவிக்கின்றனர். இதற்கு தீர்வாக அரசாங்கம் தொலைபேசி நிறுவனங்களுடன் தொடர்புக்கொண்டு குறித்த பிரதேசங்களுக்கு வலையமைப்பு வசதிகளை செய்யுமாறு மக்கள் கேட்டுக்கொள்கின்றனர்.

Tue, 06/08/2021 - 14:22


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை