இஸ்ரேலில் அரபு கட்சியின் ஆதரவுடன் கூட்டணி அரசு

12 ஆண்டு கால நெதன்யாகு ஆட்சி முடிவுக்கு வருகிறது

இஸ்ரேலில் எதிர்க்கட்சிகள் கூட்டணி அரசொன்றை அமைப்பதற்கு உடன்பாடு ஒன்று எட்டப்பட்டதை அடுத்து கடந்த 12 ஆண்டுகளாக நீடித்த பிரதமர் பென்சமின் நெதன்யாகுவின் ஆட்சிக் காலம் முடிவுக்கு வந்துள்ளது.

எட்டு தரப்புகளை ஒன்றிணைத்த கூட்டணி ஒன்று உருவாக்கப்பட்டதாக, மையவாத யெஷ் அடிட் கட்சியின் தலைவர் யயிர் லபிட் அறிவித்தார். இதில் சுழற்சி முறை ஏற்பாடாக வலதுசாரி யமினா கட்சியின் தலைவர் நப்டாலி பென்னட் முதலில் பிரதமர் பதவியை ஏற்கவிருப்பதோடு தொடர்ந்து லபிட்டிடம் அந்தப் பதவி கையளிக்கப்படவுள்ளது.

இந்த அரசு பதவி ஏற்பதற்கு முன்னர் பாராளுமன்றத்தில் வாக்கெடுப்பு ஒன்று நடத்தப்பட வேண்டி ஏற்பட்டுள்ளது.

இந்த உடன்படிக்கை குறித்து ஜனாதிபதி ரியுவன் ரிவ்லினுக்கு அறிவித்திருப்பதாக லபிட் வெளியிட்ட அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது. ‘தமக்கு வாக்களித்த மற்றும் வாக்களிக்காத அனைத்து இஸ்ரேலிய பிரஜைகளுக்கும் இந்த அரசு சேவையாற்றும் என்று நான் உறுதி கூறுகிறேன்.

எமது எதிர்த்தரப்பினரை மதிப்பதோடு இஸ்ரேலிய சமூகத்தின் அனைத்து அங்கங்களையும் ஒருங்கிணைத்து ஐக்கியப்படுத்துவதற்கு இந்த அதிகாரத்தினால் அனைத்தும் செய்வோம்’ என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இவ்வாறான ஒரு கூட்டணி சத்தியமற்ற ஒன்று என்று கூறப்பட்டுவந்த நிலையில் லபிட், பென்னட் மற்றும் அரபு இஸ்லாமியவாத ராம் கட்சி தலைவர் அன்சூர் அப்பாஸ் ஆகியோர் உடன்படிக்கையில் கைச்சாத்திடும் காட்சி இஸ்ரேல் ஊடகங்களில் வெளியாகியுள்ளன.

இதன்படி கடந்த பல தசாப்தங்களில் அரபு - இஸ்ரேலிய கட்சி ஒன்று இஸ்ரேலிய அரசில் இணைவது இது முதல்முறையாகும். எனினும் இஸ்ரேலிய மக்கள் தொகையில் 20 வீதமாக உள்ள அரபு - இஸ்ரேலியர்களை பிரதிநிதித்துவப்படுத்தும் ஏனைய கட்சிகள் பென்னட் தலைமையுடனான அரசில் இணைவதை எதிர்த்துள்ளன. பென்னட் பலஸ்தீன தனி நாட்டு திட்டத்தை நிராகரிப்பவர் என்பது குறிப்பிடத்தக்கது.

‘இந்த முடிவு கடினமாக இருந்தபோதும் இதில் பல முரண்பாடுகள் இருந்தபோதும் உடன்படிக்கை ஒன்று எட்டப்பட்டது முக்கியமானது’ என்று அப்பாஸ் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். ‘இந்த உடன்படிக்கையில் உள்ள பல விடயங்கள் அரபு சமூகத்திற்கு நன்மை தரக்கூடியதாக உள்ளது’ என்றும் அவர் குறிப்பிட்டார்.

ஜனாதிபதிக்கு எழுதிய அறிவித்தலில் பென்னட்டுடன் சேர்ந்து அரசுக்கு தலைமை வகிப்பதாக குறிப்பிட்டிருக்கும் லபிட், 2023 ஓகஸ்ட் 27 ஆம் திகதி பென்னட்டுக்கு பதில் பிரதமராக பதவியை ஏற்பதாக தெரிவித்துள்ளார்.

நம்பிக்கை வாக்கெடுப்பு ஒன்றை நடத்துவதற்கு விரைவில் பாராளுமன்றத்தை கூட்டும்படி ஜனாதிபதி ரிவ்லின் அழைப்பு விடுத்துள்ளார்.

120 ஆசனங்கள் கொண்ட பாராளுமன்றத்தில் இந்தக் கூட்டணி பெரும்பான்மை ஆதரவை பெறாதபட்சத்தில், இஸ்ரேல் கடந்த இரண்டு ஆண்டுகளில் ஐந்தாவது முறை பொதுத் தேர்தல் ஒன்றுக்கு முகம்கொடுக்கும் நெருக்கடி உள்ளது.

எட்டப்பட்டிருக்கும் கூட்டணியில் இஸ்ரேலின் அனைத்து தரப்புகளும் உள்ளடக்கப்பட்டுள்ளன. இவர்களுக்கு இடையே நெதன்யாகுவை பிரதமர் பதவியில் இருந்து நீக்கும் பொது நிலைப்பாடு தவிர்த்து ஏனைய கொள்கைகளில் முரண்பாடு காணப்படுகிறது.

கூட்டணியில் இருக்கும் எட்டுத் தரப்புகளும் பாராளுமன்றத்தில் பெரும்பான்மையான 61 இடங்களை காண்பிக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. எனினும் இந்த கூட்டணியில் உள்ள கட்சிகளிடம் மொத்தம் 62 பாராளுமன்ற ஆசனங்கள் உள்ளன.

முன்னதாக கூட்டணி ஒன்றை அமைப்பது குறித்து கடந்த புதன்கிழமை டெல் அவிவுக்கு அருகில் உள்ள ஹோட்டல் ஒன்றில் நீண்ட பேச்சுவார்த்தைகள் இடம்பெற்றன. இதில் கஞ்சாவை சட்டபூர்வமாக்குவது தொடக்கம் சட்டவிரோத கட்டுமானங்களுக்கு அபராதம் விதிப்பது வரை பல்வேறு விடயங்கள் பற்றி இணக்கம் ஒன்றை எட்டுவதற்கு முயற்சி மேற்கொள்ளப்பட்டது.

இந்நிலையில் இந்த அனைத்து அம்சங்கள் தொடர்பிலும் இறுதி முடிவு ஒன்று எட்டப்படவில்லை என்றும் இது இந்த கூட்டணிக்கு பாராளுமன்றத்தில் பெரும்பான்மை பெற முடியும் என்ற எதிர்பார்ப்பை சந்தேகமாக்கி இருப்பதாகவும் இஸ்ரேலிய ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன.

கடந்த மார்ச் மாதத் நடைபெற்ற தேர்தலில் நெதன்யாகுவின் வலதுசாரி லிகுட் கட்சி அதிக ஆசனங்களை வென்றபோதும், கூட்டணி அரசொன்றை அமைப்பதில் தோல்வி அடைந்தது.

இந்நிலையில் பரிந்துரைக்கப்பட்டிருக்கும் இந்த புதிய அரசை இந்த நூற்றாண்டின் பெரும் மோசடி என்று நெதன்யாகு சாடியுள்ளார். இது இஸ்ரேல் மற்றும் இஸ்ரேல் மக்களுக்கு ஆபத்தானது என்றும் எச்சரித்துள்ளார்.

நெதன்யாகு ஆட்சியில் இருந்து அகற்றப்படும் நிலை ஏற்பட்டதற்கு இடதுசாரி எதிர்க்கட்சிகள் காரணமல்ல. மாறாக கூட்டணியில் இருந்த, நெதன்யாகுவின் கருணையற்ற அணுகுமுறையால் எதிரிகளாக மாறிய வலதுசாரிகளே காரணமாகியிருக்கின்றனர் என்று அரசியல் விமர்சகர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

Fri, 06/04/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை