ஆப்கானிஸ்தான் வளர்ச்சியில் இந்தியாவின் பங்களிப்பு

பாராட்டுகிறார் அமெரிக்க விசேட பிரதிநிதி

கடந்த இருபது ஆண்டுகளாக ஆப்கானிய சமூக மற்றும் பொருளாதார வளர்ச்சியில் இந்தியாவின் பங்களிப்பு முக்கியமானது என்றும் புதுடில்லி இப்பங்களிப்பைத் தொடரும் என நம்புவதாகவும் ஆப்கானிய மறுசீரமைப்புக்கான அமெரிக்க விசேட பிரதிநிதி ஸல்மே கைல்ஸாத் தன் ட்டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். அமைதி, பாதுகாப்பு, பொருளாதார செழுமை என்பனவற்றுக்கான சர்வதேச சமூகத்துடன் இணைந்து நாம் ஆப்கானுக்காக இணைந்து பணியாற்றுவோம் என்றும் இவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்கப் படைகள் வாபஸ் பெறப்படும் நிலையில் ஆப்கானுக்கான விசேட அமெரிக்க பிரதிநிதி தலைமையிலான குழு கடந்த வாரம் காபுலுக்கு விஜயம் மேற்கொண்டிருந்தது. அந்நாட்டு தலைவர்கள், ஏனைய கட்சித் தலைவர்கள், சிவில் சமூக பிரதிநிதிகள் என்போரை சந்தித்த இக்குழுவினர் தோஹாவில் இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கரை சந்தித்தது. அமெரிக்க பிரதிநிதி ஸல்மே கைல்ஸாத்தும் இந்திய வெளிவிவகார அமைச்சரும் தமது பேச்சுவார்ததையின் போது ஆப்கானின் எதிர்காலம் குறித்து கருத்து பரிமாறிக்கொண்டனர்.

ஆப்கானின் மீள்கட்டமைப்பு மற்றும் வளர்ச்சிக்காக இந்தியா இதுவரை இரண்டு பில்லியன் அமெரிக்க டொலர்களை செலவிட்டுள்ளது. தனது நட்புறவை வெளிப்படுத்தும் வகையில் 90 மில்லியன் அமெரிக்க டொலர் செலவில் புதிய பாராளுமன்ற கட்டடத்தை காபூலில் அமைத்து கொடுத்துள்ள இந்தியா, ஸல்மா அணைக்கட்டையும் நிர்மாணித்துள்ளது. ஆப்கானிஸ்தான் - இந்தியா மூலோபாய கூட்டு பங்களிப்பு ஒப்பந்தத்தின் கீழ் அரசியல், பாதுகாப்பு, அபிவிருத்தி, கலாசாரம் ஆகியவற்றில் இரு தரப்பு ஒத்துழைப்பு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வந்துள்ளன.

Mon, 06/21/2021 - 08:40


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை