எலிகளுக்கு தடுப்பூசி செலுத்தியதில் நல்ல பலன்

கொரோனா வைரஸ் அவ்வப்போது உருமாறி மனித குலத்துக்கு மாபெரும் கவலையாக உருவெடுத்துள்ளது. மேலும், இனி எந்த கொரோனா வைரஸ் எல்லாம் உலகை அலைக்கழிக்க வருமோ என்ற அச்சத்தையும் ஏற்படுத்தி உள்ளது.

புதிய உலகளாவிய கொரோனா வைரஸ் தடுப்பூசி ஒன்றை அமெரிக்க விஞ்ஞானிகள் கண்டுபிடித்து அசத்தி உள்ளனர். எலிகளுக்கு செலுத்தி சோதித்ததில் நல்ல பலன் கிடைத்துள்ளது.

கொரோனா வைரஸ் தொற்று, 2019-ம் ஆண்டின் இறுதியில் சீனாவின் வூகான் நகரில் இருந்து பரவத்தொடங்கியது. ஒன்றரை ஆண்டு காலத்துக்கு மேலாக இந்த வைரஸ், உலகமெங்கும் ஆதிக்கம் செலுத்தி வருகிறது.

இந்த வைரஸ் அவ்வப்போது உருமாறி வருகிறது. இது மனித குலத்துக்கு மாபெரும் கவலையாக உருவெடுத்துள்ளது. மேலும், இனி எந்த கொரோனா வைரஸ் எல்லாம் உலகை அலைக்கழிக்க வருமோ என்ற அச்சத்தையும் ஏற்படுத்தி உள்ளது.

இந்த நிலையில் உலகளாவிய தடுப்பூசி ஒன்றை அமெரிக்கா கண்டுபிடித்துள்ளது. இதுபற்றிய பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளன.

அமெரிக்காவில் உள்ள வட கரோலினா பல்கலைக்கழக விஞ்ஞானிகள்தான் இந்த தடுப்பூசியை கண்டுபிடித்துள்ளனர். இவர்கள், 2003-ம் ஆண்டு சார்ஸ் வைரஸ் தொற்று பாதிப்பு ஏற்பட்டதைத் தொடர்ந்து இன்றளவும் கோவிட் 19 என்னும் கொரோனா வைரஸ் தொற்று அச்சுறுத்தலாகவே உள்ளதாக கூறுகிறார்கள்.

எதிர்காலத்தில் கொரோனா வைரஸ் தொற்று நோய்களைத் தடுப்பதற்கு, தற்போதைய கொரோனா வைரஸ் மற்றும் விலங்குகளிடம் இருந்து மனிதர்களுக்கு பரவும் கொரோனா வைரஸ் குழுக்களிடம் இருந்து பாதுகாப்பை வழங்குவதற்கு இந்த குழு தடுப்பூசியை வடிவமைத்துள்ளதாக கூறி உள்ளனர்.

இது குறித்த தகவல்கள் ‘சயின்ஸ்’ பத்திரிகையில் வெளியாகி உள்ளது. அதில் கூறி இருப்பதாவது:-

* கொரோனா வைரஸ் என்னும் பெரிய குடும்பத்தின் அங்கமாக சர்பேகோ வைரஸ்கள் உள்ளன. கடந்த 2 தசாப்தங்களில் (20 ஆண்டுகளில்) பேரழிவு ஏற்படுத்திய 2 நோய்களுக்கு (சார்ஸ் மற்றும் கொரோனா) பிறகு நச்சுயிரியல் வல்லுநர்களின் முன்னுரிமையாக சர்பேகோ வைரஸ்கள் அமைந்துள்ளன.

* இந்த விஞ்ஞானிகள் மெசேஞ்சர் ஆர்.என்.ஏ. தடுப்புடன் தங்கள் அணுகுமுறையை தொடங்கினர். இது பைசர் மற்றும் மாடர்னா தடுப்பூசி போன்றதாகும்.

* இருப்பினும் ஒரு வைரசுக்கான மெசேஞ்சர் ஆர்.என்.ஏ. குறியீட்டைச் சேர்ப்பதற்கு பதிலாக, பல வைரஸ்களின் மெசேஞ்சர் ஆர்.என்.ஏ.க்களை சேர்த்தனர்.

* எலிகளுக்கு இந்த கலப்பின தடுப்பூசி செலுத்தப்பட்டது. அதில் பல ஸ்பைக் புரதங்களுக்கு எதிராக செயல்படும் நோய் எதிர்ப்பு பொருள் (ஆன்டிபாடிஸ்) உருவானது. இது நல்ல பலனாகும்.

* புதிய உருமாறிய வைரஸ்கள் கண்டறியப்படுகிறபோது, இந்த தடுப்பூசி அதற்கு எதிராக செயல்படும்.

* எலிகளிடம் தற்போது மருத்துவ பரிசோதனை நடத்தப்பட்ட நிலையில் அடுத்த ஆண்டு மனிதர்களுக்கு செலுத்தி பரிசோதிக்கப்படும்.

* இதுபற்றி விஞ்ஞானி டேவிட் மார்டினேஸ் கூறுகிறபோது, “எங்கள் கண்டுபிடிப்பு எதிர்காலத்துக்கான பிரகாசமாக தெரிகிறது. நாங்கள் மனிதர்களில் ஆபத்தை ஏற்படுத்தும் வைரஸ்களிடம் இருந்து பாதுகாப்பு அளிக்க கூடுதலான தடுப்பூசிகளை வடிவமைக்க முடியும்” என தெரிவித்துள்ளார். மேலும், இதன் மூலம் சார்ஸ்-கோவ் 3 வைரசையும் தடுக்க முடியும் எனவும் அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

Fri, 06/25/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை